பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மூன்று ஐயங்கள்

277



துய்த்தவன் ஆதலின், அவனது பெருநாடும் இசையும் நடனமும் ஆகிய கலைகளின் இன்பத்தைச் சமய குரவர் காலத்தில் நன்கு நுகர்ந்து சைவப் பயிரைத் தழைக்கச் செய்தது. தேவார காலத்தில் இருந்த இசைக் கருவிகளைக் காணின், பல்லவப் பேரரசர் இசை வளர்த்த பெற்றி மேலும் நன்கு விளங்கும்.

தேவார காலத்து இசைக் கருவிகள் (கி.பி. 600-850)

1. யாழ் 2. வீணை 3. குழல் 4. கின்னரி 5. கொக்கரி 6. சச்சரி 7. தக்கை 8. முழவம் 9. மொந்தை 10. மிருதங்கம் 11. மத்தளம் 12. தமருகம் 13. துந்துபி 14. குடமுழா 15. தத்தலகம் 16. முரசம் 17. உடுக்கை 18. தாளம் 19. துடி 20. கொடுகொட்டி முதலியன. இவற்றுள், பல பண்டைக்கால முதலே தமிழகத்தில் இருந்தவை. தேவாரத்தில் காணப்படும் பெரும்பாலான பண்கள் தமிழ்நாட்டிற்கே உரியவை. அவை பண்டை இசை நூல்களில் (அழிந்துபோன நூல்களில்) கூறப்பட்ட இசை நுணுக்கம் பொருந்தியவை. அப் பண்களில் சில சிலப்பதிகாரத்துட் காணலாம். பல்லவப் பேரரசர் காலத்தில் தமிழ்நாட்டில் தமிழ்ப்பண்களும் தமிழ் இசையும் களிநடம் புரிந்தன என்பதற்குத் திருமுறைகளே ஏற்ற சான்றாகும்.[1]

ஆழ்வார் அருட்பாடல்கள்

திருப்பதிகங்கள் போலவே, பல்லவர் காலத்தில் ஆழ்வார் அருட்பாடல்கள் வைணவத் தலங்களில் நன்றாய்ப் பாடப்பட்டு வந்தன. இரண்டாம் நந்திவர்மன் காலத்தில் வைணவம் போற்றப்பட்ட சமயமாக இருந்தது. அக்காலத்தில் அருட்பாடல்கள் பெரிதும் பாடப்பட்டிருத்தல் வேண்டும். இங்ஙனம் சைவர் ஒருபுறமும் வைணவர் மறுபுறமும் இசையோடு கூடிய அருடம்பாடல்களைப் பாடியருளி இசைக்கருவிகளையும்


  1. பல்லவர் கால இசைச்சிறப்பை நன்குணர்த்தும் நூல்கள் முதல் ஏழு திருமுறைகளேயாம். இசைபற்றிய அக்காலக் குறிப்புகள் அனைத்தும் அத் திருமுறைகளில் விளக்கப்பட்டுள்ளன. இத்துறையில் தமிழ் அறிஞர் ஆராய்ச்சி நடத்தல் இன்றியமையாததாகும்.