பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மூன்று ஐயங்கள்

285



தொலைவில் உள்ளது. இங்குள்ள மலை மிகச் சிறியது. அதன் மீது ஏறிச் செல்லின், அழகின் இருப்பிடமாகவும் ஓவியக் கலையின் உறைவிடமாகவும் உள்ள குகைக் கோவிலைக் கண்டு களிக்கலாம். இதன் முன்புறம் சுவர் மறைப்புண்டு. அங்குக் காவலன் ஒருவன் காட்சி அளிக்கின்றான். முகமண்டபமான ஒரு சிறிய தாழ்வாரத்தையும் அதன்பின் சதுரவடிவில் அமைந்துள்ள உள்ளறையையும் கொண்டதே இக் கோவில். இங்குக் காணத்தக்கவை நான்கு ஆகும். அவை: (1) உருவச்சிலைகள். (2) நடனமாதர் ஒவியங்கள், (3) அரசன் அரசி ஓவியங்கள், (4) கூரையிலும் தூண்களிலும் உள்ள ஓவியங்கள் என்பன.

உருவச் சிலைகள்

முன் மண்டபத்தின் முன்புறம் நான்கு தூண்கள் இருக்கின்றன. இவற்றுள் இடையில் உள்ள இரண்டும் தனித்து நிற்கின்றன. ஓரங்களில் உள்ளவை பாறையுடன் ஒட்டினாற்போலப் பாதி அளவே தெரிகின்றன. முன் மண்டபத்தின் இரு புறங்களிலும் உள்ள சுவரில் பக்கத்துக்கு ஒன்றாக இரண்டு மாடங்கள் இருக்கின்றன. அவ்வொவ்வொரு மாடத்திலும் சமண தீர்த்தங்கரர் சிலை உள்ளது. அது யோகத்தில் அமர்ந்து இருப்பதுபோலக் காணப்படுகிறது. உள் அறையின் நடுவில் தீர்த்தங்கரர் மூவர் சிலைகள் வரிசையாக இருக்கின்றன. ஒவ்வொன்றும் மடியில் ஒரு கைம்மீது மற்றொரு கையை வைத்துக்கொண்டுகால்களை மடக்கி உட்கார்ந்துள்ள நிலை அழகியது. முன்மண்டபத்தில் உள்ள இரண்டு உருவங்களில் ஒன்று சமண தீர்த்தங்கரரான சுபார் சவநாதர் உருவம் மற்றது. சமண சமயத் தலைவர் ஒருவருடையது. இது மகேந்திரன் காலத்தில் இக் குகைக் கோவிலில் இருந்த சமணத் துறவிகள் தலைவரைக் குறிப்பதாகக் கூறலாம். தீர்த்தங்கரர் மறுபடியும் பிறவாதவர் என்பது சமணர் கொள்கை. ஆதலின் அதனைக்குறிக்க அவர் சிலைகள் மீது மூன்று குடைகள் குறிக்கப்பட்டுள்ளன. சுபார்சவநாதர் தலைமீது மூன்று குடைகள் குறிக்கப்பட்டுள்ளன. சமயத்தலைவர் மறு பிறப்பு உடையவர் என்பதைக் குறிக்க ஒரு குடையே காட்டப்பட்டுள்ளது.