“விமானங்கள், ‘தூயது, கலப்பு, பெருங்கலப்பு’ என மூவகைப்படும். கல், செங்கல், மரம் முதலியவற்றில் ஒன்றைக் கொண்டே அமைக்கும் விமானம் ‘தூய விமானம்’ எனப்படும் இரண்டைக் கொண்டு அமைப்பது ‘கலப்பு விமானம்’ எனப்படும். இரண்டிற்கு மேற்பட்ட பொருள்களால் அமைப்பது பெருங்கலப்பு விமானம் எனப்படும்” என்பது கட்டடக் கலை நூல் கூற்றாகும். இதனாலும், பண்டைக்காலத்தில் கோவில்கள் இருந்தமையும் விமானங்கள் இருந்தமையும் தெளிவாகுமன்றோ?”[1]
இனி மகேந்திரனுக்கு முன்னரே தமிழ்நாட்டிலும் தக்கானத் திலும் கோவில்கள் இருந்தவற்றைக் கல்வெட்டுகள் கூறல் காண்க.
(1) முற்காலப் பல்லவருள் ஒருவனான விசயகந்தவர்மன் காலத்தில் (கி.பி. 275-300) புத்தவர்மன் மனைவியான சாருதேவி நாராயணன் கோவிலுக்கு நில தானம் செய்ததாகக் குணபதேயப் பட்டயம் கூறுகின்றது.
(2) திருக்கழுக்குன்றத்துக் கோவிலில் உள்ள கடவுளுக்குக் கந்தசிஷ்யன் (கி.பி. 300-356) என்னும் பல்லவன் நிலம் விட்டதாகவும், அதனை நரசிம்மவர்மன் தொடர்ந்து நடத்தியதாகவும் ஆதித்தசோழன் கல்வெட்டு ஒன்று கூறுகிறது.
(3) கோச்செங்கணான் திருவக்கரையில் உள்ள கோவிலில் பெருமாளுக்கொரு கோவில் கட்டியிருந்தான்; அதிராசேந்திரன் அதனைக் கல்லால் புதுப்பித்தான்; செம்பியன் மாதேவியார் திருவக்கரைக் கோவிலைக் கல்லாற் புதுப்பித்தார்.[2] அவரே திருக்கோடிகாவில் இருந்த செங்கல் விமானத்தையும் கருங்கல் விமானமாக அமைத்தார்.[3]