பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/317

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
297
மூன்று ஐயங்கள்


“நிறைநிலை மாடத்து அரமியந் தோறும்”[1]

இங்ஙனம் அமைத்த பெரிய கட்டடங்களைச் சுற்றி இருந்த சுவர்கட்கு உயர்ந்த கோபுரங்களை உடைய வாயில்களும், அவ் வாயில்கட்குத் துருப்பிடியாதபடி செந்நிறம் பூசப்பட்ட இரும்புக் கதவங்களும் பொருத்தப்பட்டிருந்தன என்பது நெடுநல் வாடை[2] அடிகள் அறிவிக்கும் செய்தியாகும். சிதம்பரத்தில் பதஞ்சலி முனிவர்க்கு இறைவன் நடன கோலத்தைக் காட்டியருளினன் என்பது புராணச் செய்தி. பதஞ்சலி முனிவர் காலம் கி.மு. 150 என அறிஞர் அறைவர். எனவே, கோவில் எனச் சிறப்புப் பெயர் பெற்ற சிதம்பரத்தில் உள்ள கோவில் கி.மு. 150க்கு முற்பட்டதாதல் அறியத்தக்கது.

முதற் பராந்தக சோழன் (கி.பி. 907-953) சிற்றம் பலத்துப் பொன் விமானத்தைப் புதுப்பித்தான் என்று கல்வெட்டுக் கூறுகிறது. அதனால் அவனுக்கு முன்பே சிற்றம்பலம் பொன் வேயப்பெற்றதாதல் வேண்டும் என்பது பெறப்படுகிறதன்றோ? “சிம்மவர்மன் என்னும் அரசன் தன்னைப் பீடித்த உடல் நோயைப் போக்கிக் கொள்ளச் சிதம்பரம் அடைந்தான். வாவியில் மூழ்கினான்: பொன் நிறம் பெற்றான்; அதனால் இரண்யவர்மன் எனப்பட்டான் என்று கோவிற்புராணம் கூறுகிறது. அவனே சிற்றம்பலத்தைப் பொன் வேய்ந்தவன் ஆவான். சிம்மவர்மன் என்ற பெயர் கொண்ட பல்லவ அரசர் பலர் இருந்தனர். அவருள் கி.பி. 436 முதல் 458 வரை அரசாண்ட சிம்மவர்மனே மேற்சொன்ன திருப்பணியைச் செய்திருத்தல் வேண்டும் என்பது முன்பே விளக்கப்பட்டது. அப்பர் காலத்தில் சிதம்பரத்தில் பொன் அம்பலம் இருந்தமைக்கு அவர் பாக்களே சான்றாகும். சிதம்பரம் நடராசர் மண்டபம்[3] மரத்தால் கட்டப்பட்டிருத்தலே அதன் பழைமைக்குச்சான்றாகும்.


  1. மதுரைக்காஞ்சி. வரி. 451
  2. வரி 79 - 88.
  3. Navaratnam’s “S.I.Sculpture’ pp.56,57.