பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/32

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
12
பல்லவர் வரலாறு


தூபிகளை நாட்டிப் பெளத்த சமயக் கொள்கைகளைப் பரவச் செய்தான். நாலந்தாப் பல்கலைக் கழகத்தில் சிறந்த பேராசிரியராக இருந்த தர்மபாலர் காஞ்சிபுரத்தினர் என்று கூறப்பட்டுள்ளனர். அசோகன் கட்டிய தூபிகளில் ஒன்று இயூன்-சுங் காலத்தில் 100 அடி உயரத்தில் காஞ்சியில் இருந்ததாகத்தெரிகிறது. [1]

கி.மு. 150 இல் இருந்த பதஞ்சலி தமது மாபாடியத்தில் காஞ்சிபுரத்தைக் குறிப்பிட்டுள்ளார். எனவே கி.மு.2ஆம் நூற்றாண்டிலேயே காஞ்சிமாநகர் சிறந்த கலைப்பீடமாக இருந்ததெனலாம். [2]

கி.மு. முதல் நூற்றாண்டில் சோணாட்டை ஆண்ட கரிகாலன் காலத்தில் சோழ நாட்டிற்கு வடக்கே தொண்டை மண்டலம் காவல் இடமாக இருந்தது. காஞ்சியைக்கரிகாலன் அழகு செய்தான்; மதில்கள் எழுப்பினான். வடவேங்கடம் வரை நாட்டை விரிவாக்கினான்: வேளாண் குடிகளைக் கொணர்ந்து நாட்டைச் செழிப்பாக்கினான். அவன் காலத்துத் தொண்டைமான் இளந்திரையன் சோழர் சார்பாக நின்று தொண்டை நாட்டை ஆண்டு வந்தான். அவன் காலத்தில் தொண்டைநாடு வளமுற்று இருந்தது.”[3]

மாமல்லபுரம்

இது சிறந்த கடற்கரைப் பட்டினமாக விளக்கமுற்று இருந்தது. வடக்கேயிருந்து குதிரைகளைக் கொண்டு வந்த நாவாய்கள் சூழந்திருந்தன. பரதர் மலிந்த தெருக்களும் காவலர் காத்த பண்டசாலைகளும் இருந்தன. அங்கிருந்த மாடங்களில் பெண்கள் பந்தை அடித்து விளையாடி மணற் பரப்பில் கறங்காடினார்கள். கடற்கரையில் வானளாவிய மாடங்களில் வைத்தவிளக்குகள் கடலிற் சென்ற நாவாய்களில் இருந்தவர்க்குத் துறையை அறிவித்தன.[4]


  1. Beal Rec. II. p.230
  2. D.Sircar’s “Seccessors of the Satavahanas,p. 140
  3. உலகநாதபிள்ளை, ‘கரிகாற் சோழன், பக். 40
  4. பெரும்பாணாற்றுப்படை, அடி 320-325