பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

300


வேண்டும். அஃது எங்ஙனமாயினும், அப்பல்லவன், அப்பர்காலத்து மகேந்திரவர்மனுக்கு முற்பட்டவனாதல் வேண்டும். மயேந்திரப் பள்ளி என்பது ஒரு பாடல் பெற்ற இடமாகும். இது மகேந்திரன் காலத்தில் இப்பெயர் பெற்றதா? அன்றிச் சமணர் பள்ளி அப்பருக்கு முன்னரே சிவன் கோவிலாக மாறிவிட்டதா? என்பது விளங்கவில்லை. இங்ஙனமே திருப்புகலூர்க் கோவிலுக்குள் வர்த்தமானிச்சுரம் என்னும் சிறிய கோவில் ஒன்று உண்டு. அதுவும் பாடல் பெற்றதாகும். வர்த்தமானர் என்பது சமண தீர்த்தங்கரர் பெயர். இவை எல்லாம் மகேந்திரனுக்கு முன்னரே இருந்த கோவில்கள் ஆகும். எனவே, முற்கால-இடைக்காலப் பல்லவர் காலங்களில் சில புதிய கோவில்களேனும் தமிழ் நாட்டில் ஏற்பட்டன என்பதை இவை உணர்த்துகின்றன.

பல்லவ மகேந்திரவர்மனுக்கு (கி.பி. 615க்கு) முற்பட்ட தமிழகத்தில் இருந்த நாயன்மாருள் சிறந்து விளங்கிய புகழ்ச்சோழ நாயனார். கூற்றுவநாயனார், ஐயடிகள் காடவர்கோன் நாயனார் என்பவர் பல கோவில்கட்குத் திருப்பணிகள் செய்தனர் என்று சேக்கிழார் பெருமான் கூறியுள்ளனர்.

கி.பி.600க்கு முற்பட்டவரான திருமூலர், தம் காலத்தில் இருந்த செங்கற்கோவில்களையும் பூமணல் ஒன்பது மணிகள் இவற்றாலாய லிங்கங்களையும் பற்றிப் பல பாடல்களிற் கூறியுள்ளார். இவை யாவற்றிற்கும் ஏற்பக் கி.பி.7ஆம் நூற்றாண்டினரான அப்பர். சம்பந்தர் பாடிய தேவாரத் திருமுறைகளில் ஏறத்தாழ 200க்கு மேற்பட்ட கோவில்கள் பாடல் பெற்றுள்ளன. இவற்றால் சங்ககாலத்தில் இருந்த கோவில்கள் அல்லாமல் பிற்காலத்திலும் (முற்கால-இடைக் காலப் பல்லவர் காலங்களிலும்) பல கோவில்கள் புதியனவாகக் கட்டப்பட்டிருந்தன என்றெண்ண இடமுண்டாகிறது.

பிற்காலத்துக் கோவில்கள் (கி.பி. 600-900)

பழைய சமணர்கோவில், மண்டபம்போன்ற அமைப்புடையது: நான்கே தூண்களை உடையது; அகன்ற கதவுகளை உடையது.