பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/322

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
302
பல்லவர் வரலாறு


கோவிலுக்கும் வேறுபாடில்லை. பல்லவர்க்கு முன்பே தமிழகத்தில் இருந்த பெளத்தர் அமைத்த விகார வடிவில் ஒன்றிரண்டு கோவில்கள் திகழ்கின்றன. இராசசிம்மன் கட்டிய கரையோரக் கோவில் தேர் போன்ற கோவில் அமைப்புடையதே. அதன் வளர்ச்சியே அவன் கட்டிய கயிலாசநாதர் கோவில் விமானம். இதன் வளர்ச்சியே தஞ்சாவூர்ப் பெரிய கோவில் விமானம் ஆகும்.

தமது காலத்தில் இருந்த பாடல்பெற்ற கோவில்களில் காணப்பட்ட ஓவியங்களையே பல்லவர்கள் சிற்பங்களாக மாற்றினர் என்னல் மிகையாகாது. சிலப்பதிகார, மணிமேகலைகளின் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டாகும். அக்காலத்தில் இருந்த வியத்தகு சிற்பங்களும், ஓவியங்களும் மகேந்திரன் காலத்தில் அழிந்துவிட வழியில்லை. ஏறக்குறைய 400 ஆண்டுகட்குள் அவை அழிந்தன எனக் கூற இடமில்லை. அங்ஙனம் பல அழிந்திருப்பினும், சிலவேனும் அவன் உள்ளத்தைக் கொள்ளை கொண்டிருத்தல் கூடியதே என்க.

பழங்கோவில் அமைப்பு

அறிஞர் லாங்ஹர்ஸ்ட் “மாமல்லபுரத்தில் உள்ள ஒற்றைக்கற் கோவில்கள் எல்லாம் அவன் காலத்தில் இருந்த (செங்கல்லும் சுண்ணாம்பும் கொண்டு கட்டப்பட்டு, மூங்கிற்கூரை அமைந்து வேலைப்பாடு கொண்ட செப்புத் தகடுகள் அறைந்த) கோவில்களைப் போன்றவையே என்பதைப் பார்த்தவுடன் கூறிவிடலாம் என்று வரைந்துள்ளதைக் காண்க.

இப்பொழுதுள்ள தேர், விழாக்காலத்தில் எங்ஙனம் உயரமாகச் சித்திரிக்கப்படுகிறது? அதன் உயரத்தை நோக்குக. அதற்கும், மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை ஓரமுள்ள கோவில் விமானத்திற்கும் வேறுபாடு இன்மை அறிக. அக் கோவிலுக்கு உருளைகளைப் பூட்டிவிடின், அதற்கும் இன்றைய தேருக்கும் வேறுபாடு உண்டா என்பதை அறிஞர் ஆராய்தல் வேண்டும். இங்ஙனம், ஆராயின், பண்டை மரக்கோவில்களே தேர்கள் என்பதை