பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

304

பல்லவர் வரலாறு



வகைகள் பல தென் இந்தியாவில் உண்டு. அவ் வகைகள் எல்லாம் கல்லறைகளிலிருந்து தோன்றின என்னல் தவறாகாது.தென்கன்னட கோட்டத்தில் உள்ள ‘முதுபித்ரி’ என்னும் இடத்திற் காணப்படும் குருமார் கல்லறைகளில் மூன்று முதல் ஏழு அடுக்குகள் கொண்டு ‘விமானம்’ காணலாம். சதுரத்தின்மேல் சதுரம் வைத்துக் கட்டப்பட்ட ஏழு அடுக்குகள் கொண்ட சதுரக் கல்லறைகள் பல இந் நாட்டில் உண்டு. இவ்வமைப்புகள் நாளடைவில் பெரிய விமானங்களாக மாறிவிட்டன என்பதில் ஐயமில்லை.[1]

முன்னோர் வணக்கத்திற்காக ஏற்பட்ட பல கோவில்கள் பிற்காலத்தில் கடவுள் கோவில்களாக மாறின. அப் பழைய கோவில்களில் நீள் சதுர அறைதான் உண்டு. மேலிடம் தளமாக இருந்தது. அறைக்கு முன்புறம் ஒரு கூடம் உண்டு. முன் சொன்ன தொதவர் கோவில் போன்ற கோவில்களும் உண்டு. இவ்விரண்டும் பிற்காலத்தில் ஒன்று படுத்தப்பட்டன. சில இடங்களில் இரண்டும் தனித்துக் காணப்படுகின்றன. இவற்றின் வளர்ச்சியே இன்றுள்ள கோவில்கள்.[2] நமது தென்னிந்தியாவில் இங்ஙனம் இருந்த பண்டைக் கோவில்களைப் பார்த்தே பெளத்தரும் சமணரும் தம் கோவில்களை அமைத்துக்கொண்டனர்.[3] அவற்றைப் பார்த்தே பல்லவர் மாமல்லபுரம் முதலிய இடங்களில் கோவில்களை அமைத்தார்கள்: பண்டைக் கோவில்களில் இருந்த மண் பதுமைகளைப் பார்த்தே கற்கோவில்களில் பதுமைகளை அமைத்தார்கள்; விமானங்களையும் தூபிகளையும் பிறவற்றையும் அமைத்தார்கள்.

முடிபு

சுருங்கக் கூறின், பல்லவர் கோவில் அமைப்பு தமிழ் நாட்டுக் குடிசைக் கோவிலிருந்து உண்டானதென்னல் மிகையாகாது.[4]


  1. Ibid pp.72-75.
  2. Ibid pp.78-79.
  3. Annual report of A.D. Southern Circle, 1914, p.34.
  4. இத்தகைய கோவில்களை இன்றும் காவிரிப்பூம்பட்டினத்திற் காணலாம்.