பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/330

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
310
பல்லவர் வரலாறு


தளவானுர்க் கல்வெட்டு, திருமங்கையாழ்வார் பாடல்கள், நந்திக்கலம்பக ஆசிரியர் பாடல்கள், திருத்தணிகைக் கல்வெட்டில் உள்ள வெண்பா இவற்றால் அறியக் கிடக்கிறது. இவர்கட்கு முன்னர் வடமொழியிலும் தென்மொழியிலும் புலமை பெற்ற ஐயடிகள் காடவர் கோன் என்ற பல்லவ அரசர் ஒருவர் இருந்தார் என்றும், அவர் “சிவத்தளி (சேஷத்திர) வெண்பா"ப் பாடினார் என்றும் பெரிய புராணம் குறிக்கிறது. அவர் பாடிய ‘சிவத்தளி வெண்பா’ சிதைந்த நிலையில் இன்று 11-ஆந் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. அவரே மூன்றாம் சிம்மவர்மன் என்பர் ஆராய்ச்சியாளர்.[1]

சிவத்தளி வெண்பா (கி.பி. 550-575)

‘இறக்குந் தறுவாயில் நேரும் துன்பங்கள் அடையாமுன், இன்னின்ன தளிவாழ் இறைவனை நினை’ என்று மனத்திற்கு அறிவுறுத்துவதாக அமைந்த வெண்பாக்களின் தொகுதியே ‘சிவத்தளி வெண்பா’ என்பது. இப்பொழுதுள்ள பாடல்கள் 24. அவற்றுட் பல தளிகள் குறிக்கப்பட்டுள்ள. அவை-தில்லை. குடந்தை, ஐயாறு, ஆரூர், திருத்துருத்தி, திருக்கோடிகா, பாண்ட வாய்த் தென்னிடைவாய், திருநெடுங்களம், குழித்தண்டலை, ஆனைக்கா, மயிலை, சேனைமாகாளம், வளைகுளம், சாய்க்காடு, திருப்பாச்சிலாச் சிராமலை, திருமழபாடி (கொள்ளிடத்துத்தென்) திருஆப்பாடி, காஞ்சிபுரம், திருப்பனந்தாள், திருவொற்றியூர், திருக்கடவூர் மயானம் என்பன.

பல்லவரைப் பற்றிய தனிப்பாடல்கள்

அகத்தியனார். இவர் பாடல் ஒன்று, பல்லவம் என்பது தனிநாடு: தமிழ் ‘வழங்காத நாடு’ என்னும் செய்தியைக் கூறுகிறது.[2]

மகேந்திரன் (கி.பி. 615-630) குடைவித்த தளவானுர்க் குகைக் கோவிலில் வெண்பா ஒன்று காணப்படுகிறது. அது,


  1. Mysore Annual Archaeological Report 1925, pp.9-12.
  2. நன்னூல் சூ.272 மயிலை, உரை.