பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/340

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
320
பல்லவர் வரலாறு


பல்லவரது குழப்பமான அரசாட்சி, பல நாட்டார் செய்த போர்கள். திகம்பர சமணர், புத்தர் இவர்தம் இடையீடு இன்ன பிறவற்றால் பழந்தமிழ்ச்செய்யுட்கள் பல அழிந்தொழிந்தன. ஓரளவு அமைதியும் பல்லவர் பாண்டியர் நட்பும் உண்டான நந்திவர்மன் இறுதிக் காலத்தில், கிடைத்த பழைய பாடல்களைப் பெருந்தேவனார் முறைப்படுத்திச் சேர்த்திருத்தல் கூடியதே என்க. மூன்றாம் நந்திவர்மன் பைந்தமிழை ஆய்ந்த நந்தி ஆதலாலும், பாண்டிய நாடு தன் உறவு கொண்டமையாலும் இந் நன்முயற்சியில் ஈடுபடுமாறு தன் அவைப்புலவரை வேண்டி இருக்கலாம். அவரும் அதற்கு உடம்பட்டுப் பாக்களைத் தொகுத்துக் கடவுள் வாழ்த்துக்கூறி முடித்திருக்கலாம்,[1] என்று வரலாற்று ஆசிரியர் சிலர் எண்ணுதல் ஆராய்ச்சிக்குரியதே ஆகும்.

சேரமான் பாடிய நூல்கள்
(கி.பி. 825-850)

முன்னுரை

இவர் சுந்தரர் காலத்தவர்; மூன்றாம் நந்திவர்மன் காலத்தவர்; சீமாறன் சீவல்லபன் காலத்தவர்; இவர் பொன் வண்ணத்து அந்தாதியைத் தில்லைநகரிற் (பல்லவர் நாட்டில்) பாடினார்; மும்மணிக்கோவையைத் திருவாரூரிற் பாடினார்; ஞானவுலாவைக் கயிலையிற்பாடினார் என்பர். இவை மூன்றாம் பல்லவர்கால நூல்கள் ஆதலின், இவற்றைப்பற்றிச்சிறிதேனும் அறிதல் நன்றாகும்.

அந்தாதி

இது நூறு பாக்களைக் கொண்டது; முதலும் முடிவும் பொன்வண்ணம் எனத் தொடங்கி முடிவது சங்கமங்கை (23), மறைக்காடு (47), ஐயாறு (60), தில்லை (77), கழுக்குன்றம் (59)


  1. P.T.S.Iyengar’s “History of the Tamils’.