பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/344

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
324
பல்லவர் வரலாறு


மக்களை ஆண்டு, தமிழராக மாறிய பல்லவ வேந்தர் தமிழ் அறிவுடையராக இருந்தனர் என்பது பல சான்றுகளால் நிறுவப்பெற்றது. அவர்கள் தமிழ்மொழியை வளர்த்ததோடு, தமிழ்ப் புலவர்களையும் ஆதரித்து வந்தனர் எனக் கோடல் பொருத்தமே ஆகும். மூன்றாம் நந்திவர்மனுக்கு முற்பட்ட பல்லவர் காலத்துப் புலவர் இன்னவர், அவர் செய்த நூல்கள் இன்னவை என்பன இப்பொழுது அறியக் கூடவில்லை. ஆயினும், ஒவ்வோர் அரசன் அவையிலும் தமிழ்ப் புலவர் (பட்டயம் எழுதவும் கல்வெட்டில் பாட்டு எழுதவும், பிற சிறப்புடைய அரசியல் ஒலைகள் தீட்டவும்) இருந்திருத்தல் வேண்டும் என்பதை உய்த்துணரலாம்.


25. பல்லவர் கோநகரம்

சங்க காலச் சோழர் ஆட்சியில் காஞ்சிமா நகரம் எங்ஙனம் இருந்தது என்பது முதற் பிரிவில் கூறப்பட்டதன்றோ? இப் பிரிவில் பல்லவர் கோநகரம் ஆகிய காஞ்சிபுரம் எந்நிலையில் இருந்தது என்பதைப் பல்லவர் எழுத்துகளைக் கொண்டும் பிற்காலச் சோழர் எழுத்துகளைக் கொண்டும் இன்றைய நிலையைக் கொண்டும் ஒருவாறு காண்போம்:

நகர அமைப்பு

இயூன்-சங்காலத்தில் காஞ்சி நகரத்தின் சுற்றளவு ஏறத்தாழ ஆறு கல்; இன்று ஏறத்தாழ ஐந்து கல்; ஒனகாந்தன் தளியிலிருந்து பிள்ளைப்பாளையம் வரை இன்று வயல்களாக உள்ள நிலப்பகுதி நகரமாக இருந்திருத்தல் வேண்டும் என்பது கயிலாசநாதர் கோவில் கல்வெட்டுகளால் நன்கு தெரிகிறது. வேகவதியாற்றை ஓர் எல்லையாகப் பழைய நகரம் கொண்டிருந்ததென்னல் பிழையாகாது. நகரம் மேற்கில் மேடாகவும் கிழக்கில் பள்ளமாகவும் இருக்கிறது; மேற்கிலிருந்து கிழக்கே வில்லைப்போல் வளைந்திருக்கிறது; நகரத்தெருக்கள் பெரும்பாலும் அகன்றவை. அரச வீதிகள் நான்கும்