பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/345

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மூன்று ஐயங்கள்

325



ஏறத்தாழ 100 அடிஅகலம்கொண்டவை: ‘தேரோடும்விதிகள்,படை செல்லும் வீதிகள்’ என்று கூறத்தக்கவாறு அகன்றுள்ளன. பெருமழை நீரும் சாலைகளில் தேங்குதல் இல்லை; உடனே உட்சென்று விடுகிறது. இந்நகர் நடுவே மஞ்சள்நீர்க் கால்வாய் என்பது ஓடுகிறது. இதனை அடுத்துப் பண்டைக் காலத்தில் ஒடை போன்ற அகழி இருந்தது என்று பெரியோர் பலர் கூறுகின்றனர். அந்த அகழிக்கு அணித்தே உள்ள தோட்டங்களில் நிலத்திற்கு அடியில் செங்கற் படைகள் இன்றும் கிடைக்கின்றன. அச் செங்கற்கள் 18-அங்குல நீளம் 9-அங்குல அகலம் 4-அங்குலகனம் உடையன. எனவே, அச் செங்கற் சுவர் கோட்டைமதிற்கவரின் பகுதியாக இருக்கலாம் என்று எண்ண வேண்டுவதாக இருக்கிறது. ‘மகேந்திரன் கோட்டை மதிலுக்குள் நுழைந்து கொண்டான், அஃது ஏறி உட்செல்ல முடியாத உயரமும் வன்மையும் உடையது’ என்று சாளுக்கியர் பட்டயம் கூறலாலும், ‘மதிற் கச்சி’ எனத் தேவாரத்தில் வருதலாலும் பல்லவர் காலத்தில் நகரைச் சுற்றி மதில் இருந்திருத்தல் வேண்டும் என்பது புலனாகிறது. காஞ்சி நகரம் பிற்காலத்தில் பல மாறுதல்களைப் பெற்று விட்டமையாலும் சோழர். விசய நகரத்தார், முஸ்லிம்கள் இவர்கள் ஆட்சியில் பல மாறுபாடுகள் உற்றிருத்தல் இயல்பே ஆதலாலும், பல்லவர் காலச் சின்னங்கள் பல இன்று காண்டல் அருமையே ஆகும்.

எனினும், ஏறத்தாழ இந் நகரப் பொது அமைப்பைப் பல்லவரை அடுத்துவந்த சோழர் காலத்துத் தண்டியலங்காரம் கூறுகிறது. அது கி.பி. 11ஆம் நூற்றாண்டு நூல்: பல்லவர்க்கு 150 ஆண்டுகட்குப் பின் செய்யப்பட்டது. பல்லவர் காலத்துத் தலைநகரம் சோழர்க்கு வடபகுதியின் தலைநகரமாக விளங்கியது. ஆதலால், பெரிய மாறுதல் எதுவும் நேர்ந்திருக்க இடமில்லை. ஆதலின் நாம் தண்டியலங்காரப் பாடலைச் சிறந்த சான்றாகக் கோடலில் தவறில்லை. அது வருமாறு:

“ஏரி இரண்டும் சிறகா, எயில்வாயிறாக்,
காருடைய பீலி கடிகாவா,-நீர்வண்ணன்