பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/36

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
16
பல்லவர் வரலாறு


காணப்படுகின்றன. சம்பந்தர் பாடிய பதிகங்களில் சமணரைப் பற்றிய குறிப்புகள், பாண்டியரைப் பற்றிய குறிப்புகள் காணக் கிடக்கின்றன. இவ்விருவரும் கி.பி.7ஆம் நூற்றாண்டினர் என்பது ஆராய்ச்சியாளர் முடிபு. இவர்கட்குப் பிற்பட்ட கி.பி.9ஆம் நூற்றாண்டின் முற்பாதியில் இருந்த சுந்தரர் பாடிய தேவாரத்தில்,

“....மண்ணுலகம் காவல் பூண்ட -
உரிமையால் பல்லவற்கு திறைகொடா மன்னவரை மறுக்கம் செய்யும்
பெருமையாற் புலியூர்ச்சிற்றம்பலத்தெம் பெருமான்”[1]

என்னும் குறிப்புக் காணப்படுகின்றது. இக் குறிப்பால், பல்லவர் பேரரசர் என்பதும். அவரது ஆட்சிக்குள் சிற்றரசர் பலர் இருந்தனர் என்பதும், அவர்கள் திறை கொடுக்க மறுத்தனர் என்பதும் நன்கு புலனாகின்றன அல்லவா?

(5) நாலாயிரப் பிரபந்தம் :-திருமங்கை ஆழ்வார் கும்பகோணத்தை அடுத்த நந்திபுரம் (நாதன்கோவில் - இன்றைய பெயர்) என்னும் வைணவப் பதியைப்பற்றிச் சில குறிப்புகள் பாடியுள்ளார். அது கோட்டை மதில்களை உடையது. காவல் மிகுந்தது. நந்திவர்ம பல்லவ மல்லன் பெயரால் நடத்தப் பெற்ற போர்களில் ‘நென்மலி’ என்னும் இடத்துப்போர் ஒன்றாகும். அதனைத்திருமங்கை ஆழ்வார்,

“நென்மலியில் வெருவச் செருவேல் வலக்கைப்
பிடித்த படைத்திறல் பல்லவர்கோன்”

என்று பாடியுள்ளார்; வயிரமேகன் என்னும் இராட்டிர கூட அரசன் (கி.பி.725-758) காஞ்சியில் பல்லவ மல்லவனோடு இருந்தான் என்று வேறொரு பாட்டில் பாடியுள்ளார்.[2] பல்லவர் சாளுக்கியரோடு செய்த போரில் பயன்படுத்திய போர்க் கருவிகள், இசைக்கருவிகள்


  1. சுந்தரர் தேவாரம், ப.90, செய்.
  2. பெரிய திருமொழி. வி.10:2, 9, 8: 3.9