பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பல்லவரைப் பற்றிய சான்றுகள்

17



முதலியவற்றின் பெயர்களைக் குறிப்பிட்டள்ளார். எனவே, இவர் நந்திவர்ம பல்லவ மல்லன் (கி.பி. 710-775) காலத்தவர். இவர் பாடல்களும் பல்லவர் வரலாற்றுக்கு உதவி செய்வன ஆகும்.

(6) நந்திக்கலம்பகம்:- இந்நூல் மூன்றாம் நந்திவர்மன் (கி.பி.825-850) காலத்தது; இவனைப் பற்றியது; இவன் போர்ச் செயல்களையும் நகரங்களையும் பிறவற்றையும் விளக்கமாகக் குறிப்பது. இவ்வரசன் ‘பல்லவர் கோன்’, மல்லை வேந்தன். மயிலை காவலன், காவிரிவளநாடன், எனப் பலபடப் பாராட்டப் பெற்றுள்ளான். இவன்தமிழ்ப் புலவர்களை ஆதரித்தவன் என்று செ. 104, 107 கூறுகின்றன.

(7) பாரதவெண்பா:- இந்நூலின் சிறிதளவே இன்று கிடைத்துள்ளது. அதுவே ‘உத்தியோக பருவம்’ என்பது. அதன் முதற் பகுதியில் மூன்றாம் நந்திவர்மன் ‘தெள்ளாறு’ என்னும் இடத்தில் பகைவர்களை முறியடித்த செய்தி கூறப்பட்டுள்ளது.

(8) பெரிய புராணம்:- இந்நூல் கி.பி.12ஆம் நூற்றாண்டில் சேக்கிழார் என்னும் பெரும் புலவராற் பாடப்பட்ட தாயினும், இதன்கண் இடம்பெற்றுள்ள பெரும்பாலான நாயன்மார் காலம் பல்லவர் காலமே ஆகும். சேக்கிழார் இரண்டாம் குலோத்துங்கச் சோழனது உயர் அலுவலாளர் ஆதலால், பல்லவர் பரம்பரை, ஆட்சிமுறை முதலிய விவரங்களை நன்கு அறிந்திருத்தல் கூடும்; மேலும் அவர் பல்லவர் நிலைபெற்று ஆண்ட தொண்டை மண்டலத்தைச் சேர்ந்தவர்; பல்லவ புரத்தை (பல்லாவரம்) அடுத்த குன்றத்தூரிற் பிறந்து வளர்ந்தவர்; பல்லவர் கோவில் பணிகளையும், கல்வெட்டுச் செய்திகளையும் செவிமரபுச் செய்திகளையும் நன்கு அறிந்தவர். இவ்வசதிகளைப் பெற்ற அப்பெரியார் பாடியுள்ள பெரிய புராணத்தில் பல்லவர் காலத்திய தமிழகம் ஓவியமாக விளக்கப்பட்டுள்ளதை நூலறிவும் நுண்ணறிவும் உடையார் நன்கறிவர். நாயன்மார் அறுபான் மூவருள் காடவர் கோன் கழற்சிங்கர் ஒருவர்; இவர் “கூடலர்முனைகள் சாய வடபுலம் கவர்ந்து கொண்டு”,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பல்லவர்_வரலாறு.pdf/37&oldid=583567" இலிருந்து மீள்விக்கப்பட்டது