பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

பல்லவர் வரலாறு



அரசாண்டவர் என்று பெரிய புராணம் கூறுகிறது. இவரைத் ‘தொல்லைப்பல்லவர்’ என்றுங் கூறுகிறது. இதனால், சேக்கிழார் பல்லவருடைய பரம்பரைகளை (முன்னைப் பின்னை நடைபெற்ற பல்லவர் பரம்பரைகளை) நன்கறிந்தவர் என்பது தேற்றமன்றோ? சேக்கிழார் ஐயடிகள் காடவர்கோன் நாயனார் என்பவர் வரலாற்றையும் பாடியுள்ளார். இந்த நாயனாரும் பல்லவ மன்னர்:

“மன்னவரும் பணிசெய்ய வடநூல்தென் தமிழ்முதலாம்
பன்னுகலை பணிசெய்ய”

ஆண்ட பேரரசர்; சைவப்பதிகளை வணங்கி வெண்பாக்கள் பாடிப் பேறு பெற்றவர்.

அப்பர் காலத்தில் வாழ்ந்த குணபரன் (கி.பி.615-630) (குணதரன் - முதலாம் மகேந்திரவர்மன்) அப்பர்க்கு இழைத்த இன்னல்களும், அவன் சமணத்தைவிட்டுச் சைவனாக மாறினதும் பெரிய புராணத்துட் காணலாம். அவன் மகனான நரசிம்மவர்மன் (கி.பி.630-668) சேனைத் தலைவரான பரஞ்சசோதியார் (சிறுத்தொண்டர்) சாளுக்கியர் மீது படையெடுத்து வாதாபி வென்றதும், அவர் சம்பந்தர் நண்பரானதும் பெரிய புராணத்தில் காணலாம்.

பூசலார் நாயனார் காலத்துக் காடவர்கோனான இராசசிம்மன் (கி.பி.880-710) எடுத்த கற்றளி (கைலாசநாதர் கோவில்) சிவபெருமான் அரசன் கனவிற் சென்று கூறினமை முதலிய செய்திகளைச் சேக்கிழார் பூசலால் புராணத்தில் விளக்கியுள்ளார். இறைவன் கனவிற் சென்று கூறியதாகக் கூறும் பெரியபுராணச் செய்தியே இராசசிம்மன் அசரீரி கேட்டதாகக் கைலாசநாதர் கோவில் கல்வெட்டு ஒன்றில் குறிக்கப்பட்டுள்ளது. எனவே, சேக்கிழார் பெருமான் கல்வெட்டுகளையும் கருத்திற்கொண்டே புராணம் பாடியுள்ளார் என்பது இங்கு அறியத்தக்கதாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பல்லவர்_வரலாறு.pdf/38&oldid=516878" இலிருந்து மீள்விக்கப்பட்டது