பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/40

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
20
பல்லவர் வரலாறு


நாமும் மாமல்லபுரம், காஞ்சிபுரம், பல்லவபுரம், மகேந்திரவாடி, தாளவானூர், சீயமங்கலம், திருச்சிராப்பள்ளி, சிங்கவரம், கீழ்மாவிலங்கை, திருக்கழுக்குன்றம், மாமண்டூர், வல்லம், மண்டப்பட்டு, மேலைச்சேரி, சித்தனவாசல் முதலிய இடங்களில் உள்ள குகைக் கோவில்களையும் கற்கோவில்களையும் காண்கின்றோம்; ‘பெரியபுராணம் முதலிய நூல்களில் காணப்படும் பல்லவர் அமைத்தவை இவை,’ என்பதை ஒருவாறு உணர்கின்றோம்.

எனவே, இதுகாறும் கூறியவற்றால், (1) சங்காலத்திற்குப் பிறகு தமிழ்நாட்டில் பல்லவர் என்னும் மரபினர் பேரரசர்களாக இருந்தனர் என்பதும், (2)அவர்கள் பல குகைக்கோவில்களையும் கற்கோவில்களையும் அமைத்தனர் என்பதும், (3) சில ஊர்கட்குத் தங்கள் பெயர்களை இட்டு வழங்கினர் என்பதும், (4)அவருள் பலர் சைவாக இருந்தனர் என்பதும் ஒருவாறு உணர்தல் கூடுமே அன்றி, அப்பல்லவர் வரலாறுகளை அறிதல் கூடவில்லை.

பட்டயங்களும் கல்வெட்டுகளும்

பழைய அரசர்கள் கோவில்களுக்கும் பிராமணர்களுக்கும் தானங்கள் தந்த விவரங்களைச் செப்புப்பட்டயங்களில் எழுதி வந்தனர். அவற்றில் ‘இன்ன அரசன் பட்டமேற்ற இன்ன ஆண்டில்’ என்பது சிறப்பாகக்குறிக்கப்பெற்றது. அத்துடன், சில பட்டயங்களில் அவ்வேந்தன் முன்னோர் பெயர்களும் அவர்தம் விருதுப்பெயர்களும் அவர்கள் செய்த போர்களும் அறச்செயல்களும் குறிக்கப்படலும் உண்டு. இத்தகைய பட்டயங்கள் அரசர் மரபுக்கேற்றபடியும் நாட்டு முறைமைக்கு ஏற்றபடியும் பலமொழிகளில் எழுதப்பெறும். பல்லவர் தமிழகத்திற்கே புதியவர் ஆதலின், அவர் பட்டயங்களும் கல்வெட்டுகளும் முதலில் பிராக்ருத மொழியிலும், வடமொழியிலுமே வரையப் பெற்றன. பிற்காலப் பல்லவரே தமிழ் மொழியில் வரையத்தலைப்பட்டனர். இங்ஙனம் மூன்று மொழிகளில் அமைந்த பட்டயங்கள் சில கிடைத்துள்ளன. கி.பி. ஏழாம் நூற்றாண்டு முதல் ஆண்ட பல்லவர் கற்களில் பல செய்திகளைப் பொறித்துள்ளனர்.