பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

பல்லவர் வரலாறு



‘கி.பி. 150 இல் ருத்ர தாமன் என்னும் ஆந்திரப் பேரரசன் அமைச்சனான சுவிராகன் என்பவன் பஹ்லவன். அவன் மரபினரே ஆந்திரப் பேரரசு அழிவுறுங்காலத்தில் அதன் தென்பகுதியைத் தமதாக்கி ஆண்டவராவர். பட்டயங்களில் காணப்படும் முதற் பல்லவர் அரசர் அல்லர், ஆந்திரப் பேரரசின் தென் மேற்கு மாகாணங்களை ஆண்டு வந்த சூட்டுநாகர் பெண்ணை மணந்து பட்டம்பெற்றவனே முதற்பல்லவன். அவனே வீரகூர்ச்சவர்மன் என்று பல்லவர் பட்டயங்களில் கூறப்படுமவன்’ என்று வரைந்துள்ளார்.[1]

இங்ஙனம் பல்லவர் என்பார் பஹ்லவர் மரபினரே என்று முடிபு கொண்டவர் பலர் உளர். இலங்கையிற் சிறந்த ஆராய்ச்சியாளராக இருந்த இராசநாயகம் என்பவர், ‘இலங்கையை அடுத்துள்ள மணிபல்லவம் (காரைத்தீவு) பல்லவர் பிறப்பிடமாகும். மணிமேகலையில் கூறப்பட்டள்ள சோழனை மணந்த பீலிவனை என்பவர் நாகர் மகள் ஆவாள். அவன் பெற்ற மைந்தனே திரையால் கடத்தப்பட்டுக்கரை சேர்ந்த முதல் பல்லவன். அவன் தொண்டைக் கொடியால் சுற்றப்பட்டு இருந்தமையின் தொண்டைமான் என்றும், திரைகளால் உந்தப்பட்டு வந்தமையின் திரையன் என்றும் வழங்கப்பெற்றான். அவன் மரபினரே தம் தாயகப் பெயரைத்தாங்கிப் (மணி பல்லவம்) பல்லவர் எனப்பட்டனர். பல்லவர் முதல் அரசன் பெரும்பாணாற்றுப் படையில் புகழப்பெற்ற தொண்டைமான் இளந்திரையன் ஆவன்’ என விளக்கியுள்ளார்.[2]

யாழ்ப்பாணம் யாழ்ப்பாண மக்களால் ‘மணிபுரம்’ எனப்படுகிறது; அங்கு நாகரும் இருந்தமையால் ‘மணி நாகபுரம்’ என்னும் பெயர் பெற்றது. இந்தியாவிலிருந்து இலங்கை நோக்கி வருபவர்க்கு யாழ்ப்பாணம் ஒரு போது (போத்து-Sprout) போலக் காணப்படுதலின், அது போது (போத்து) எனப்பட்டது. போது, போத்து, பல்லவம் என்பன ஒரே பொருளைக் குறிப்பன.


  1. Vide his Ancient “History of the Dekkhan’, pp.47-60
  2. “Indian Antiquary’, Vol. III. pp.75-80
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பல்லவர்_வரலாறு.pdf/46&oldid=583574" இலிருந்து மீள்விக்கப்பட்டது