பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/55

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
35
பல்லவர் யாவர்?


தலைவராக இருந்தவரும் அவர் மரபினரும் கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அருவாவடதலை நாட்டைமுதற்கண் கைப்பற்றி, உழவு, நாகரிகம் முதலியவற்றை நுழைந்தனர்; பிறகு சோழவேந்தர் வலியற்ற நிலையைக் கண்டதும், அருவாநாட்டையும் கைப்பற்றினர்; சோழர் காலத்துத் தலைநகரமாக இருந்த -கல்விக்கும் பல சமயங்கட்கும் நிலைக்களமாக இருந்த-காஞ்சியைத் தங்கள் கோநகரமாக ஆக்கிக் கொண்டனர் என்பன நன்கு விளங்குதல் கூடும் அன்றோ? இவர்களே தங்களைப் பல்லவர் என்று கூறிக்கொண்டனர்.

பல்லவர் அரச மரபினரே

இவர்கள் தம்மைப் ‘பாரத்வாச கோத்திரத்தார்’ எனக் கூறுதல் கட்டுக்கதை. இவர்கள் சிறந்த சத்திரியரே. கதம்பமயூர சன்மன் இவர்களைப் ‘பல்லவ சத்திரியா’ என்று கூறியதாகத் தாளகுண்டாக் கல்வெட்டுக் கூறுகிறது. எனவே, பல்லவர் சத்திரியர் ஆவர். அவர்கள் வாகாடகர், சாலங்காயனர் முதலிய பிற அரச மரபினரோடு தொடர்பு கொண்டனர். ஆயின், தமிழ் வேந்தர் ஆர், வேம்பு, பனை இவற்றைத் தம் மரபுக்கு அடையாளமாகக் கொண்டவாறே ஆந்திர நாட்டிலிருந்து வந்த பல்லவரும் தமிழ் முறை பற்றித் தம்மைப் (பல்லவக்கொடி-தொண்டைக்கொடி பற்றிப்) பல்லவர் என அழைத்துக் கொண்டனர் ஆவர்.[1]

காடவர் முதலிய பெயர்கள்

காடவன், காடவர்கோன், காடுவெட்டி என்பன பல்லவர்க்குப் பிற்காலத்தில் வந்த பெயர்கள். கி.பி 8 ஆம் நூற்றாண்டிற்குப் பிறகே பல்லவர் கல்வெட்டுகளில் இவை பயில்கின்றன; வேற்றரசர் கல்வெட்டுகளிலும் வருகின்றன. எனவே, இப் பட்டங்கள் தமிழ் மக்களால் இடப்பட்டதாதல் வேண்டும்.பல்லவர் காடுகளை அழித்து நாடாக்கினமை இதனால் நன்கு புலனாகிறது.[2]


  1. Dr. C.Minakshi’s “Administration and Social Life under the Pallavas,’ pp. 12-13.
  2. Ibid pp. 17-1