பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



அணிந்துரை

 V


ஏற்பட்டன. மேலும், பல்லவர்கள் காடவர் முதலிய பட்டங்களைக் கொண்டிருந்தார்கள் (காடு வெட்டி நகரத்தின் பெயர் காண்க. இஃது இப்போது ‘கார்வெட்டி நகரம்’ எனப்படுகிறது) அப்பெயர்கள் தமிழ்ப் பெயர்களே. அவை பிற்காலப் பெயர்களாக இருக்கலாம். இருந்தாலும் அவற்றையே தமிழ் நூல்கள் ஆதரிக்கின்றன. ‘போத்தரையர்’ என்பது அவர்களுடைய சிறப்புப் பெயர். ‘போது’ என்பது மலருக்கும் எருமைக் கடாவிற்கும் கூறப்படும். மலையாளத்தில் கொங்கு அரசன் ‘போது’ என்ற சொல் எருமைக் கடாவில் வந்து போர் புரிந்ததாகச் சொல்லப்படுகிறது. (கொங்குப் படை வரலாறு காண்க.)

இப்போதும் தொண்டை நாட்டிலும் அதனைச் சுற்றிலும் போத்தராச கோவில்கள் உண்டு. இவை பல்லவர் காலத்து வழக்கு என்று அறியக்கூடும். அக் கோவில்களை அரச பரம்பரையினராக உரிமை பாராட்டும் வன்னிய குலத்தார் போற்றி வருவதை அறிவோம். ஆகவே, பல்லவர் தமிழ் நாட்டினரே என்று கொள்வதே தகுதி என்னலாம்.

பல்லவப் பெருமக்கள் வடமொழிக்குப் பல உதவிகள் புரிந்துள்ளார்கள். அதற்குக் காரணம் அக்காலத்தில் வடநாட்டு நாகரிகம் தெற்கே பரவத் தொடங்கியதே. எந்த இயக்கமும் முதலில் அதிகமாகப் பாராட்டப் படுவது இயற்கை; பின்னர், அதன் வேகம் குறைந்து விடுவது வழக்கம். பல்லவ அரசு தொடங்கிய காலத்தில் வடக்கே இருந்த பெளத்தமும் சமணமும் வந்தன. அவற்றின் குரவர்கள் தம்மோடு வட மொழியைக் கொண்டுவந்தார்கள். காஞ்சி அச் சமயங்கட்கு நடுநாயகமாக விளங்கியது. பல்லவ மன்னர்களும் அவற்றை ஆதரித்தனர். ஆகவே, வடமொழிக்கு ஏற்றம் தரப்பட்டது. ஆனால், நாள் ஆக ஆக அவ்வேற்றம் குறைந்தது. தமிழின் மேம்பாடு தொடங்கியது. அம் மேம்பாட்டிற்கு ஆதரவு தந்தவர்கள் சைவ வைணவ சமய ஆசிரியர்கள். நாயன்மார்களும், ஆழ்வார்களும் 5, 6, 7, 8 ஆம் நூற்றாண்டுகளில் தோன்றித் தமிழை ஆதரித்தனர். சமணமும் பெளத்தமும் நிலை குலைந்தன. சைவ வைணவங்கள் மேலிட்டுத் தமிழை ஆதரித்தன. இவ்வியக்கங்களுக்குப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பல்லவர்_வரலாறு.pdf/7&oldid=583595" இலிருந்து மீள்விக்கப்பட்டது