பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/74

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
54
பல்லவர் வரலாறு


தமது நாட்டிற்கு மேற்கே வளர விடுதல் பல்லவர் நன்மைக்கு ஏற்றதன்று. ஆதலின், பல்லவர் அடிக்கடி கதம்பருடன் இந்த இடைக்காலத்தில் தொடர்ந்து போரிட வேண்டியவர் ஆயினர்.

கதம்பர் சிங்க இலச்சினை, குரங்குக் கொடி, ‘பெர்மத்தி’ என்னும் வாச்சியம் முதலியவற்றை உடையவர். அவர் அனைவரும் தம்மைத் ‘தர்ம மகாராசாதிராசர்’ என்றே கூறிக்கொண்டனர். அவர் குல தெய்வம் வனவாசியில் உள்ள ‘மதுகேசா’ ஆவர். கதம்ப அரசர் பெரும்பாலும் சமணர்க்கே மிகுதியாகத் தானம் அளித்துள்ளனர்.[1]

கங்கர்

காவிரிக்குத் தெற்கே குடகு நாட்டையும் மைசூரின் ஒரு பகுதியையும் ஆண்டவர் கங்கர் என்பவர். இவர் தலைநகரம் தழைக்காடு என்பது. இவர்கள் சேர நாட்டிற்கு வடக்கே இருந்தனர். பல்லவர் பேரரசின் போது அதற்கு அடங்கி இருந்தனர்; கதம்பர் படை யெடுத்த போதெல்லாம் பல்லவர் துணையைப் பெற்று வாழ்ந்தனர். இவர்களில் முதல்வனான மாதவன் காலம் கி.பி. 350 என்னலாம்.[2]

கங்க அரசர் நாக மரபினர்; நாகமரபைச் சேர்ந்த பெண்களை மணந்தனர். அரவக் கொடியையே கொடியாகப் பெற்றவர்.[3]

தமிழகத்தரசர்

இந்த இடைக்காலத்தில் பல்லவ நாட்டிற்குத் தெற்கே வன்மை மிகுந்து இருந்தவர் களப்பிரர் ஆவர். அம் மரபினரே சோணாட்டின் பெரும் பகுதியையும் பாண்டிய நாட்டையும் ஏறக்குறையக் கி.பி. 250-550 வரை ஆண்டு வந்தனர். இக் காலத்தில் சோழரும் பாண்டியரும் சிற்றரசராக இருந்து காலம் கழித்தனர்; எனினும், பல்லவரை எதிர்த்த பொழுதெல்லாம் களப்பிரரோடு சேர்ந்தே


  1. Mysore Gazetter. Vol II, Part II, P.505.
  2. M.V.Krishna Rao’s “Gangasof Talakad” pp.13, 14.
  3. Ibid p. 180.