பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/75

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
55
இடைக்காலப் பல்லவர்


போரிட்டனர். எனவே, இத் தமிழ் வேந்தர்கள் இடைக்காலப் பல்லவர்க்கு ஓயாத துன்பத்தை விளைத்தே வந்தனர். இவரைப் பற்றிய விரிவு முன்னரே தரப்பட்டுள்ள தன்றோ?

அகச்சான்றுகள்

இடைக்காலப் பல்லவரைப் பற்றி அறியப் பெருந்துணை புரிவன வடமொழியில் வரையப்பட்ட செப்பேடுகளும் இரண்டொரு கல்வெட்டுகளுமே ஆகும். வடமொழி வளர்ச்சியில் நுண்ணறிவுடையார் இவற்றை ஆராய்ந்து இவற்றின் காலம் ஏறக்குறைய கி.பி. 340-575 எனக் கூறியுள்ளனர். செப்பேடுகள் பல இடங்களிலிருந்து பல்லவ அரசர்களால் விடப்பட்டுள்ளன. அவற்றில் பல முதற்காலப் பல்லவரைப் போலக் காஞ்சிபுரத்திலிருந்து வெளியிட்டதாகத் தெரியவில்லை. அவையாவும் தெலுங்க நாட்டில் உள்ள ‘தாம்ராப, பலககட, மேன்மாதுர, தசனபுரம், பிகீரா, ஒங்கோடு, தர்சி. இராய கோட்டம், சந்தலூர், உதயேந்திரம் உருவப்பள்ளி,’ என்னும் இடங்களிலிருந்து வெளியிடப்பட்டவை ஆகும். கல்வெட்டுகள் வாயலூர், அமராவதி என்னும் இடங்களிலிருந்து வெளியிடப் பட்டவை ஆகும். இப்பட்டயங்களும் கல்வெட்டுகளும் பிராக்ருதப் பட்டயங்களைப் போலவே அரசன் பட்டமேற்ற ஆண்டையே குறிக்கின்றன. ஆயின் பல்லவ அரசர் பலர் பெயர்களைக் குறிக்கும் இப் பட்டயங்கள் அவர்கள் முறையைக் கூறுவதில்லை. இதனால், அரசர் முறை வைப்பு உள்ளவாறு அறிதல் கூடவில்லை. இன்ன அரசன் இன்ன காலத்தவன் என்றும் உறுதியாக உரைக்க இயலவில்லை.

புறச்சான்றுகள்

(1) கங்கர் கல்வெட்டு ஆயின், இஃதே இடைக்காலத்தில் பல்லவ நாட்டை அடுத்த வேற்று நாட்டரசர் பட்டயங்கள் சிலவற்றால், இவ்விடைக்காலப் பல்லவர் சிலர் ஆண்ட காலங்களைச் சற்றேறக்குறைய ஒருவாறு அறிய முடிகின்றது. மேலைக்கங்க அரசனான இரண்டாம் மாதவன் வெளியிட்ட