பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/8

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
vi பல்லவர் வரலாறு


பல்லவர்களே காரணர்களாக இருந்தனர். அவர்களால் ஆயிரக் கணக்கான சமய நிலையங்கள் தோற்றுவிக்கப்பட்டன. தமிழ்மக்கள் பெருமையும் விரிந்தது.

பல்லவர்கள் சமயத்திற்குச் செய்த தொண்டுகளுள் சிறந்தவை கோயில்களே. அதுவரை மண்தளி (கோவில்)களாக இருந்தவை கற்றளிகளாக மாற்றப்பட்டன. தொடக்கத்தில் பாறைகளைக் குடைந்து குடை கோவில்களைக் கண்டனர். (இப்போது குகைக் கோவில்கள் என்கிறார்கள்.) குடை கோவில்கள் சமணர்களுடைய பழக்கத்தின்மேல் ஏற்பட்டவை என்று கூறவேண்டும். பண்டைக் குடை கோவில்கள் சமணர்கள் தவத்திற்காகக் குடைந்தவையே. அதனைப் பின்பற்றிப் பல்லவர்கள் குடை கோவில்களை ஆக்கினார்கள். (மகேந்திரவர்மன் சமணனாக இருந்து சைவனாகிக் குடை கோவில்களை முதலில் குடைந்தவன்.) பிறகு தனிப் பாறைகளைக் கோவில்களாகச் செதுக்கினார்கள். (மாமல்லைச் சிற்பத் தேர்களைக் காண்க.) பிறகு கற்களைப் படிமானம் செய்து கட்டடமாகக் கட்டினார்கள். (மல்லைச் சலசயனப் பெருமாள் கோவில்,திருத்தணிகை வீரட்டானேசர்கோவில்) இம்மூன்றுவகைக் கோவில்களும் பல்லவர்கள் சமைத்தவையே. இவற்றைப் பின்பற்றியே சோழர்கள் பெருங் கோவில்களை எழுப்பினார்கள். ஆகவே, பல்லவர்களே கோவில் அமைப்பிற்கு மூல புருடர் என்று கூறல்வேண்டும். அவர்கள் காலச் சிற்பங்களை வெகு எளிதில் கண்டுகொள்ளலாம். தூண்கள் கன சதுரங்களும் இடையில் 8 பட்டைகளும் கொண்டுள்ளன. துவார பாலகர்கள் இரு கைகள் கொண்டுள்ளார்கள். திருமால் எறியும் படை தரித்தவர். இலிங்கத்திற்குப் பின் சோமஸ்கந்தமூர்த்தி உண்டு. இச்சின்னங்கள் இருப்பின் பல்லவர் கோவில் என்றறிக. இவர்கள் காலத்தில்தான் யானை முதுகு அல்லது ‘தூங்கானை மாடம்’ என்ற விமானம் தோன்றியது. (திருத்தணிகை வீரட்டானேசர் கோவில் விமானம் காண்க.)