பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/83

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
63
இடைக்காலப் பல்லவர்


பெருநாட்டின் வடபகுதியைக் கவர்ந்தனர். அவருள் ஒருவனான முதலாம் பிருதிவிசேனன் (கி.பி. 350-390) என்பவன் தெற்கு நோக்கிப் படையெடுத்தான் கதம்ப அரசனை (கங்கவர்மனை)ப் போரில் முறியடித்தான்.[1] இப் படையெடுப்பு ஏறத்தாழக் கி.பி. 350-360 இல் நடந்திருக்கலாம்.[2] இந்தப் பிருதிவிசேனனே கதம்பரை வென்ற பிறகு, அணித்திருந்த பல்லவரையும் தாக்கிக் காஞ்சியைக் கைப்பற்றி இருக்கலாம்; தன் இளவரசன் அல்லது தானைத்தலைவனான ‘சத்தியசேனன்’ என்பவனைக் காஞ்சிக்கு அரசனாக்கி மீண்டிருக்கலாம்; காஞ்சியும் அதற்கு வடபாற்பட்ட நிலப்பகுதியும் சிறிது காலம் சத்தியசேனன் ஆட்சியில் இருந்திருக்கலாம். அக்காலத்தில் நமது பழைய ஆந்திர பதத்திற்கு ஓடிவிட்ட பல்லவர் வழிவந்த கந்தவர்மன் தக்க படையுடன் வந்து, முதலில் இருபிறப்பாளர் கடிகையை (கல்லூரியை)க்கைப்பற்றி இருக்கலாம்.

‘கடிகா’ என்பது காஞ்சி அன்று

‘கடிகா’ என்பது கல்லூரியையும் அஃது ஊரையுமே குறிக்கும். அது, (காஞ்சியில் கல்லூரி இருப்பினும்) காஞ்சியைக் குறிக்காது. காஞ்சி ‘பல்லவனாம்புரி’ என்று தெளிவாகக் கதம்பரது தாள குண்டாக் கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது; ‘மயூரசர்மன் பல்லவனாமபுரீ (காஞ்சி) அடைந்து கடிகாவில் சேர்ந்தனன்’ என்று தெளிவுற அதே கல்வெட்டுக் குறித்துள்ளது. ஆதலின், ‘கடிகா’ என்று வேலூர் பாளையக் கல்வெட்டில் காணப்படுவதும், இரண்டாம் கந்தவர்மனால் கைப்பற்றப் பட்டதும் காஞ்சி அன்று; மேலும், அவனுக்குப் பின்வந்த அவன் மகனான ‘குமாரவிஷ்ணு காஞ்சியைக் கைப்பற்றினான்’ எனவரும் கல்வெட்டுத் தொடரும் இம்முடிபிற்கு அரண் செய்தல் காண்க.

‘கடிகா’ என்பது யாது?

வேலூர் பாளையப் பட்டயத்தில் ‘கடிகா’ எனத் தனித்து வந்திருத் தலால், இது வட ஆர்க்காட்டுக் கோட்டத்தில் பாணபுரத்திற்கு ஏழு


  1. Prof. Dubruell’s “Ancient History of Dekkhan,’ pp.98-100.
  2. R.Gopalan’s “Pallavas of Kanchi’, P71.