பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/85

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
65
இடைக்காலப் பல்லவர்


வெற்றிகொண்டான். இங்ஙனம் காஞ்சியில் மீட்டும் பல்லவர் அரசு நிலைபெற்ற பின்னரே, இக் குமார விஷ்ணு மகனான புத்தவர்மன் சோழரையும் வென்றான் என்று வேலூர் பாளையப் பட்டயம் பகர்கின்றது.

வேலூர் பாளையப் பட்டயம் சோழர் என்றும் கதம்பர் என்றும் தெளிவாகக் குறிப்பிட்டு, சத்தியசேனன் இன்னவன் என்று குறியாது விடுத்தமையும், குமாரவிஷ்ணு இன்னவரிடமிருந்து காஞ்சியை மீட்டான் என்பதைக் குறியாமையும் நோக்கிச் சிந்திப்பார்க்கு, நாம் மேலே விளக்கிக் கூறிய அனைத்தும் பொருத்தமாகக் காணப்படும்.[1]

திருக்கழுக்குன்றம்-கல்வெட்டு

‘கந்தசிஷ்யன் என்ற இரண்டாம் கந்தவர்மன் திருக்கழுக் குன்றத்துச்சிவன் கோவிலுக்கு நிபந்தம் விட்டிருந்தான்; அது மீட்டும் முதல் நரசிம்மவர்மன்காலத்தில் புதுப்பிக்கப்பட்டது என்று இராசராச சோழன் கல்வெட்டுக் குறித்தலால்,[2] திருக்கழுக்குன்றம் முதல் கடிகாசலம் வரை இருந்த நிலப்பகுதி இவன் கையில் இருந்தது என்பதை அறியலாம். இவன் இங்ஙனம் காஞ்சிக்கு அண்மை (ஏறத்தாழ 56 கி.மீ தொலைவு) வரையுள்ள நாட்டைப் பிடித்தமை யாற்றான், குமார விஷ்ணு எளிதிற் காஞ்சியைக் கைப்பற்ற முடிந்தது போலும்!

இதுகாறும் கூறியவை பொருந்துமாயின், பல்லவர் காஞ்சியை மீட்க வாகாடகருடன் இருமுறை போர் செய்தனர் என்பது கோடல் தகும்.

கி.பி. 7ஆம் நூற்றாண்டினான நரசிம்மவர்மன் மேலைச் சாளுக்கியரை வென்று, அவர்தம் தலைநகரை அழித்துப் பதின்மூன்று ஆண்டுகள் வசப்படுத்தி இருந்தான்[3] என்பதை


  1. எனினும் இது முடிந்த முடிபன்று. மேலும் ஆராய்ச்சிக்குரியது.
  2. K.A.N. Sastry’s “Cholas,’ Vol.II, Part I, p.486.
  3. Dr. S.K. Aiyangar’s Int, to the “Pallavas of Kanchi’, p.27.