பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68

பல்லவர் வரலாறு



அஃதாவது காகுத்தவர்மன் (கி.பி.425-450) கால முதல் கதம்பர் தம் மாட்சி ஏற்படுத்த முயன்று பல்லவரோடு போரிட்டிருத்தல் வேண்டும்; அத்துடன் கதம்பர் தெற்கே இருந்த கங்க நாட்டையும் கைப்பற்ற முனைந்திருத்தல் வேண்டும். என்னை? கங்கரை அடிக்கடி வென்றதாகக் கதம்பர் பட்டயங்கள் குறிக்கின்றமையின் என்க. கங்கர் பல்லவர் துணையை நாடினர். கதம்பரை அடக்கிவைக்கக்கங்கர்க்குப் பல்லவர் உதவ வேண்டியவர் ஆயினர்.

(2) அரிவர்மன் கி.பி. 436 முதல் 460 வரை கங்கநாட்டை ஆண்டான். இவன்காலப் பல்லவ அரசன் முதல் சிம்மவர்மன். அவன் பட்டம் பெற்ற ஆண்டு கி.பி. 436. அக்காலத்தில் கதம்ப அரசனாக (கி.பி. 425-450) இருந்தவன் காகுந்த வர்மன். அவன் குப்தர்க்கும் வாகாடர்க்கும் பெண் கொடுத்த பெருமையுடையவன்.[1] அவனது தாளகுண்டாப் பட்டயமே மயூர சன்மன் பல்லவர் மீது கொண்ட பகைமையையும் கதம்ப அரசு உண்டான வரலாற்றையும் குறிப்பது. எனவே காகுத்த வர்மன் பல்லவர்மீது வெறுப்புற்றவன் என்பது கல்வெட்டால் நன்கறியலாம். அவன் இளவரசனாக இருந்தபோதே பல போர்கள் செய்தவன்.[2] அவன் அரிவர்மன் பட்டம் பெறத் தடை செய்தனனோ, அல்லது அரசனாக இருந்த அவனைப் போரிட்டு வென்றனனோ தெரியவில்லை. இதனிற் சிம்மவர்மன் தலையிட வேண்டியதாயிற்று. அவன்தன்தலையீட்டில் வெற்றியும் பெற்றான்; அரிவர்மன் கங்க அரசன் ஆனான்.

(3) கங்க அரசனான இரண்டாம் மாதவன்.கி.பி. 450 முதல் 500 வரை அரசாண்டான். அப்பொழுது இருந்த பல்லவன் சிம்மவர்மன் மகனான மூன்றாம் கந்தர்வர்மன் அப்பொழுது ஏறத்தாழப் பட்டம் பெற்ற கதம்ப அரசன் மிருகேசவர்மன் என்பவன். இவன் தன் பாட்டனைப்போலவே கங்க அரசன் மீது படையெடுத்தான் போலும் ‘இவன் கங்கரை வென்று பல்லவரை நடுங்க வைத்தான்’ என்று


  1. Ibid pp.21-22, 26.
  2. Ibid. p.23.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பல்லவர்_வரலாறு.pdf/88&oldid=583613" இலிருந்து மீள்விக்கப்பட்டது