பக்கம்:பழங்கதைகளும், பழமொழிகளும்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராமாயணத்தோடு தொடர்புடைய இடங்கள் பற்றிய புனைகதைகள் இராமாயண நிகழ்ச்சிகள் நடந்த இடங்களாகப் பல இடங்கள் தமிழ் நாட்டில் குறிப்பிடப்படுகின்றன. அல்லது இராமாயணக் கதை மாந்தர்களோடு தொடர்புபடுத்தப்படுகின்றன. பல நாட்டு இலக்கிய ஆய்வாளர்களும், அகழ்வாராய்ச்சி அறிஞர்களும் இராமாயணம் குறிப்பிடும் இடங்கள் அனைத்தும் மத்தியப் பிரதேசத்திற்கு வடக்கில்தான் உள்ளன என்றுமுடிவுகூறியிருக்கிறார்கள். இலங்கைதான் இராமாயணம் குறிப்பிடும் இடங்களில் தென்கோடியிலுள்ளதாகச் சொல்லப்படுவது என்பது அனைவரும் அறிந்ததே. அதுகூட மத்தியப் பிரதேசத்தில் ஒர் ஏரியின் நடுவில் இருந்ததாக எச்.டி. சங்காலியா முதலிய ஆய்வாளர்கள் சான்றுகளோடு முடிவுகட்டியுள்ளார்கள். ஆனால் தமிழ் நாட்டில் பல தீர்த்தங்கள், ஆறுகள், மலையுச்சிகள், கடற்கரைப் பட்டினங்கள் முதலியவை அனுமன், சடாயு, சீதை முதலிய கதாமாந்தர்களோடு தொடர்பு படுத்தப்படுகின்றன. இத்தொடர்பின் தன்மைகளை சமூக மானிடவியல், பண்பாட்டு மானிடவியல் நாட்டுப் பண்பாட்டியல் ஆய்வுகள் தந்திருக்கும் அடிப்படையில் இக்கட்டுரையில் ஆராயப்பட்டுள்ளன. வரலாற்று முற்கால சமுதாயத்தில் வாழ்ந்த மனிதர்கள் தமது சூழ்நிலையின் தன்மைகளை அறிய முயன்றார்கள். இயற்கை, இடங்கள், விலங்குகள், மனிதர்களின் செயல்கள் முதலியவற்றை அறிந்து விளக்குவதற்கு முயன்றனர். ஆனால் அவர்கள் அவற்றைப் பற்றிக் கேள்விகளைக் கேட்க முடிந்ததேயன்றி,கேள்விகளுக்குப்பதில் காணும் அறிவு வளர்ச்சி பெற்றிருக்கவில்லை.