பக்கம்:பழங்கதைகளும், பழமொழிகளும்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

4 . . . பழங்கதைகளும் பழமொழிகளும் கேட்டனர். ஆதாரங்களோடு விடையளிக்க முடியாத வினாக்களுக்கு கதைகளைப்புனைந்து அவற்றையே விடையாக அளித்தனர். விஞ்ஞான ஆய்வுகளும், சிந்தனை வளர்ச்சியும் ஏற்பட்டிராத காலத்தில் பண்டைய மக்கள் இயற்கையைப் பற்றியும் வாழ்க்கையைப் பற்றியும் இத்தகைய விடைகளையே கண்டுபிடித்திருக்கிறார்கள் என்பதைப் பண்பாட்டு மானிடவியல் விளக்குகிறது. படைப்புக் கதைகளின் தோற்றம் இப்புனைக் கதைகளின் தோற்றம் பற்றி ஆண்ட்ரூலாங் கூறுவதாவது:"பண்டைய மக்களின் சடங்காச்சாரங்களினின்றும் (Rits) இக்கதைகள் எழுகின்றன. மனிதனது இயல்பு பற்றியும், பிரபஞ்சத்தின் மூலாதாரம் பற்றியும் தத்துவ பூர்வமான சிந்தனைகளாக இப்புனை கதைகளைக் கருதமுடியாது. பிரபஞ்சம் எப்படித் தோன்றியது என்ற வினாவிற்கு இவை கற்பனையான விடை என்று கொள்ளுவதற்கில்லை”. ஈ.ஓ. ஜேம்ஸ் கூறுகிறார்: “படைப்புக் கதைகளும் சாவின் துவக்கமும் மனித இனத்தின் அழிவும் பல புனை கதைகளின் கருப்பொருள்களாக இருப்பினும் அவை தத்துவவிளக்கங்களாக இல்லை என்பது ஆண்ட்ரூ லாங் கூறுவதுபோல் உண்மையே.” பண்டைய மக்கள் சடங்காச்சாரங்களை வாழ்க்கையில் நலன்களைப்பெறமிக அவசியமெனக் கருதினர். மழைபெய்யவும், பயிர் வளரவும், காய், கிழங்குகள் கிடைக்கவும் நோய் நொடிகள் வராமல் இருக்கவும், வேட்டையில் விலங்குகள் கிடைக்கவும், புயல் போன்ற இயற்கை விபத்துகள் நேராமல் இருக்கவும் பலவகைச் சடங்குகளை நிகழ்த்தினர். இலையுதிர் காலம் முடிந்து வசந்த காலம் துவங்குகிறபோது பருவ மாறுதலை வரவேற்றும் வசந்த காலத்தில் பயிர்கள் செழித்து வளரவும் பண்டைய மக்கள் சடங்குகளை நடத்தினர். காலங்களை மனித உருவங்களாகக் கற்பனை செய்து ஒரே தெய்வம் இறந்து மறுபடி உயிர் பெறுவதாக நம்பி, இவற்றை நடத்தினர். எகிப்திய பிரமிட் கோபுரங்களில் செதுக்கப்பட்டிருக்கும் சிற்பங்களிலிருந்து ஆஸிரிஸ் என்ற பருவங்களின் தெய்வம் இறந்து மறுபடி உயிர்த்தெழும் கதையையும், சடங்குகளைப் பற்றியும்