பக்கம்:பழங்காலத் தமிழர் வாணிகம்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கண்டது. (மகா வம்சம் XI:23-24) பிறகு, மீண்டும். அதே வழியாகக் கப்பலில் பிரயாணஞ் செய்து ஜம்புகொவு பட்டினத்தையடைந்தது. (மகாவம்சம் X1:33)

அசோக சக்கரவர்த்தி புத்தகயாவிலிருந்த போதி மரத்தின் கிளையை வெட்டிச் சங்கமித்திரையின் தலைமையில் இலங்கைக்கு அனுப்பினபோது சங்கமித்திரையும் அவருடைய பரிவாரமும் போதி (அரச) மரக்கிளையுடன் மரக்கலம் ஏறி ஜம்புகொலப் பட்டினத்துக்கு வந்து இறங்கினார். (மகாவம்சம் XIX: 23) தேவனாம்பிரிய திஸ்ஸன் அமைச்சர்களுடனும் பரிவாரங்களோடும் ஜம்புகொல துறைக்கு அருகில் பன்னசாலை (பர்ணசாலை - ஓலைக் கொட்டகை) அமைத்துக் கொண்டு அங்குத் தங்கியிருந்து போதி மரக் கிளையையும் சங்கமித்திரையையும் வரவேற்றன். அவன் தங்கியிருந்த இடம் சமுத்த பன்னசாலை (சமுத்திர பர்ணசாலை) என்று பெயர் பெற்றது (மகாவம்சம் XIX: 26). பிறகு அந்த அரசன் அந்த இடத்தில் மண்டபம் கட்டினான். (மகாவம்சம் XIX: 27, 28) போதி மரக்கிளையுடன் அனுப்பப்பட்ட. எட்டு போதிமரக் கன்றுகளில் ஒன்றை அவன் அந்த இடத்தில் நட்டான், (மகாவம்சம் XIX: 60) பிறகு இந்த போதிமரத்துக்குக் கீழே புத்தருடைய பாத பீடிகையமைக்கப்பட்டது. இதற்கு மணிப்பல்லவங்கம் (மணிப்பலகை, மணிப்பீடம்) என்று பெயர். மணிப்பல்லங்கம் என்னும் பெயர் பிற்காலத்தில் மணி பல்லவம் என்று திரிந்து வழங்கிற்று என்று தோன்றுகின்றது. இந்தப் புத்த பீடிகையை மணிமேகலைக் காவியம், மணிப்பீடிகை என்றும் தருமபீடிகை என்றும் கூறுகின்றது.

காவிரிப்பூம் பட்டினத் துறைமுகத்திலிருந்து தெற்கே முப்பது யோசனை தூரத்தில் மணிப்பல்லவத் துறை இருந்தது (மணிமேகலை 6: 211-13). தமிழகத்திலிருந்து (சோழ நாடு பாண்டிய நாடுகளிலிருந்து) கிழக்கே வெதுதூரத்திலிருந்த சாவக நாட்டுக்கு (கிழக்கிந்தியத் தீவுகளுக்கு) வாணிகத்தின் பொருட்டுச் சென்ற தமிழக நாவிதர்கள் மணிபல்லவத் துறையில் தங்கி அங்குப் புத்தபட்டு பீடிகைக்கு எதிரில் இருந்த கோமுகி என்னும் ஏரியிலிருந்து குடிநீரைக்

99