பக்கம்:பழங்காலத் தமிழர் வாணிகம்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கப்பல்களில் எடுத்துக் கொண்டு பிறகு பிரயாணத் தொடங்கினார்கள்.

பாண்டி நாட்டுக் கப்பல் வாணிகர் சாவசத் தீவுகளுக்கு வாணிகத்தின் பொருட்டுக் கடலில் சென்றபோது இடைவழியில் மணிபல்லவத் துறையில் தங்கிச் சென்றார்கள் (மணி 14: 79-84).கோவலன் மகள் மணிமேகலை பௌத்த மதத்தைச் சேர்ந்த பிறகு மணிபல்லவஞ் சென்று அங்கிருந்த புத்தபாத பீடிகையை வணங்கி மீண்டும் தன் ஊருக்குத் திரும்பி வந்தாள் (மணி 25: 120-127). இலங்கையின் வட பகுதியாகிய இப்போதைய யாழ்ப்பாண தேசம் அக்காலத்தில் நாகநாடு என்று பெயர் பெற்றிருத்தது. அந்த நாகநாட்டை அக்காலத்தில் அரசாண்ட வளைவாணன் என்னும் நாககுல மன்னன் மகள் பீலிவளை என்பவள் மணிபல்லவத் துறையிலிருந்து புறப்பட்டுக் காவிரிப் பூம்பட்டினத்துக்கு வந்து கடற்கரைச் சோலையிலே தங்யிருந்தபோது அப்பட்டினத்தில் இருந்த வடிவேற்கிள்ளி என்னும் சோழன் அவளுடன் உறவு கொண்டான். சில காலங்கழித்து அவள் தன்னுடைய ஊருக்குத் திரும்பிப் போனாள். அங்கு அவள் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்து, அக்குழந்தையை மணிபல்லவத் துறையில் வந்து தங்கின கம்பலச் செட்டி என்னும் கப்பல் வாணிகனிடம் கொடுத்து அக்குழந்தையைச் சோழனிடம் சேர்க்கும்படி அனுப்பினாள். கம்பலச் செட்டி குழந்தையுடன் கப்பலில் புறப்பட்டுக் காவிரிப்பூம் பட்டினத்துக்கு வந்தபோது இடைக் கடலில் கப்பல் கவிழ்ந்து குழந்தை இறந்து போயிற்று (மணி 25; 178-192). சோழ நாட்டிலிருந்து சாவக நாட் டுக்குச் சென்ற மணிமேகலை சாவக நாட்டு அரசன் புண்ணிய ராசனைக் கண்டு அவனோடு புறப்பட்டு மணிபல்லவத்துக்கு வந்து அங்கிருந்த புத்தபாத பீடிகையை வணங்கினாள் (மணி 25: 120-127). இலங்கையிலிருந்து சோழ நாட்டுக்கும் காஞ்சிபுரத்துக்கும் வந்த பௌத்த பிக்குகள் ஜம்பு கொல பட்டினத்திலிருந்து கப்பலேறி வந்தார்கள். இவ்வாறு எல்லாம் பழைய நூல்களில் மணிபல்லவ-சம்பு கொல பட்டினம் கூறப்படுகின்றது.

100