பக்கம்:பழங்காலத் தமிழர் வாணிகம்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மாதிட்டை

இது இலங்கையின் மேற்குக் கரையில் மன்னார் குடாக் கடலில் பாண்டி நாட்டுக்கு எதிர்க் கரையிலிருந்த பேர் போன பழைய துறைமுகப் பட்டினம். மாதிட்டை என்பது மகாதிட்டை என்றுங் கூறப்பட்டது. கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் இலங்கையை யரசாண்ட முதல் சிங்கள அரசனான விசயன், பாண்டியன் மகளை மணஞ்செய்து கொண்டான். அவனுடைய எழுநூறு தோழர்களும் பாண்டி நாட்டில் பெண் கொண்டு திருமணஞ் செய்து கொண்டார்கள். மண மகளிர் பாண்டி நாட்டிலிருந்து இலங்கைக்குக் கப்பலில் சென்ற போது அவர்களும் அவர்களுடன் சென்ற பரிவாரங்களும் பதினெட்டு வகையான தொழில்களைச் செய்தவர்களின் குடும்பங்களும் மாதிட்டைத் துறைமுகத்தில் இறங்கிச் சென்றார்கள் என்று மகாவம்சம் கூறுகின்றது. (மகாவம்சம் VII:58) கி.மு. முதல் நூற்றாண்டில் இலங்கையையரசாண்ட சோழ நாட்டுத் தமிழனாகிய ஏலேலன் (ஏலாரன்) மீது துட்டசுமுது என்னும் அரசன் இலங்கையில் போர் செய்தபோது ஏலேலனுக்கு உதவியாகச் சோழ நாட்டிலிருந்து படை திரட்டிக் கொண்டு போன பல்லுகன் என்னும் அரசன் மாதிட்டைத் துறைமுகத்தில் இறங்கினான், (மகாவம்சம் XXV:80) வட்டகாமணி அரசன் (கி.மு. 44-29) இலங்கையையரசாண்டபோது ஏழு தமிழ் நாட்டு வீரர்கள் படையெடுத்துச் சென்று இலங்கையில் போர் செய்தார்கள். அவர்கள் (கி.மு. 29) மாதிட்டைத் துறையில் இறங்கினார்கள் என்று மகாவம்சம் கூறுகின்றது. (மகா, XXXIII:39) அந்தத் தமிழர்கள் வட்டகாமணி அரசனை வென்று சிங்கள நாட்டைப் பன்னிரண்டு ஆண்டு (கி.மு. 29-17) வரையில் அரசாண்டார்கள்.

மாதிட்டை பிற்காலத்தில் மாதோட்டம் என்று பெயர் கூறப்பட்டது. தேவாரத்தில் மாதோட்டம் என்று கூறப்படுகின்றது. மாதோட்டத்தில் பாலாவி ஆற்றின் கரைமேல் உள்ள திருக்கேதீச்சுரத்தைத் திருஞானசம்பந்தர் பாடியுள்ளார். மாதிட்டையாகிய மாதோட்டம் மிகப் பழங்காலத்திலிருந்து முக்கியமான துறைமுகப் பட்டினமாக இருந்தது.

101