பக்கம்:பழங்காலத் தமிழர் வாணிகம்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ் நாட்டில் முதல் முதலாகப் பயிர் செய்தான் என்று தெரிகின்றது.

தமிழ் நாடெங்கும். கரும்பப் பயிர் செய்யப்பட்ட இடம் கரும்பின் பாத்தி என்றும் கரும்பின் கழனி என்றும் கூறப்பட்டது. கரும்பைப் பழனவெதிர் என்று ஒரு புலவர் கூறியுள்ளார். (பழனம்-கழனி. வெதிர் - மூங்கில், மூங்கில் மலைகளில் தானாகவே வளர்வது. கரும்பு, கழனிகளில் பயிர் செய்யப்படுவது. மூங்கிலைப் போலவே கரும்பும் கணு உள்ளது. ஆகையால் கழனிகளில் பயிர் செய்யப்படுகிற மூங்கில் என்று கரும்பு கூறப்பட்டது.) கரும்பு தமிழ் நாடு எங்கும் பயிரிடப்பட்டது.

'அகல்வயல் கிளைவிரி சரும்பின் கணைக்கால் வான்பூ '

(அகம், 235 : 11-12)

'அகல்வயல் நீடுகழைக் கரும்பின் கணைக்கால் வான்பூ '

(அகம், 217 : 3-4)

'விரிபூங் கரும்பின் கழனி'

(2 ஆம் பத்து 3:13)

'தேம்பொதிக் கொண்ட தீங்கழைக் கரும்பு.'

(குறுந், 85:4)

கரும்பைச் சாறு பிழியும் எந்திரங்களும் கருப்பஞ் சாற்றை வெல்லங் காய்ச்சும் ஆலைகளும் ஊர்கள் தோறும் இருந்தன. பாண்டி நாட்டுத் தேனூரில் கருப்பைச் சாறு பிழியும் எந்திரமும் வெல்லம் காய்ச்சும் ஆலையும் இருந்தன.

'கரும்பின் எந்திரம் களிற்றெதிர் பிளிற்றும்
தேர்வண் கோமான் தேனூர்'

என்று ஐங்குறுநூறு கூறுகின்றது. வெல்லத்துக்கு விசயம் என்று பெயர் கூறப்பட்டது. வெல்லக்கட்டியைச் சுருக்கமாகக் கட்டி என்றும் கூறினார்கள். வெல்லம் 'கரும்பின் தீஞ்சேறு' என்றும் கூறப்பட்டது .

'எந்திரம் சிலைக்கும் துஞ்சாக் கப்பலே
விசயம் அடூஉம் புகைசூழ் ஆலை தொறும்
கரும்பின் தீஞ்சாறு விரும்பினர் பெறுமின்'

(பெரும்பாண், 260-261)

என்றும்,

103