பக்கம்:பழங்காலத் தமிழர் வாணிகம்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வுக்கு முன்பு இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்டதென்று 'ஆராய்ச்சி அறிஞர்கள் கூறுகிறார்கள். எனவே அந்தப் பணித வாணிகன் நெடுமூலன் 2200 ஆண்டுகளுக்கு முன்னே கடைச் சங்க காலத்தில் இருந்தவன் என்பது தெரிகின்றது.

அந்தக் காலத்தில் ஐரோப்பாக் கண்டத்தில் வாழ்ந்தவர்களுக்குக் கரும்பும் கரும்புக் கட்டியும் தெரியாது. அவர்கள் தேனையுண்டனர். தேனும், போதிய அளவு கிடைத்திருக்காது. கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் ஐரோப்போருக்குக் கரும்பும் வெல்லமும் தெரிந்தன. ஐரோப்பாவில் விளைத்த பீட்ரூட் கிழங்கிலிருந்து சர்க்கரையைக் காய்ச்சும் விதத்தை அவர்கள் 18 ஆம் நூற்முண்டில் அறிந்தனர். பாரத நாட்டிலும் தமிழகத்திலும் 2,000 ஆண்டுகளுக்கு முன்பே கரும்பும் கரும்புக் கட்டியும் தெரிந்திருந்தன, தமிழகத்தில் கரும்பப் பயிர் செய்வதும் கரும்புக் கட்டிக் காய்ச்சுவதும் சங்க காலம் முதல் நடைபெற்று வருகின்றன.

கள்ளும் மதுவும்

ஆதிகாலம் முதல் உலகமெங்கும் மதுவும் கள்ளும் அருந்தப்பட்டன. தமிழகம் உட்பட பாரத நாடு முழுவதும் அக்காலத்திலிருந்து மதுபானம் அருந்தப்படுகின்றது. தமிழ் நாட்டிலே எல்லாத் தரத்து மக்களும் கள்ளையும் மதுவையும் அருந்தினார்கள் என்பதைச் சங்கச் செய்யுட்களிலிருந்து அறிகின்றோம். முடியுடை மன்னரும் குறுநில அரசரும் புலவர்களும் போர் வீரர்களும் ஆண்களும் பெண்களும் செல்வரும் வறியவரும் எல்லோரும் மது அருந்தினார்கள், பௌத்த, சமண மதத்தாரும் திருவள்ளுவர் போன்ற அறிஞர்களும் கள்ளுண்பதைக் கண்டித்த போதிலும் மக்கள் கள்ளையும் மதுவையும் அருந்தி வந்ததைச் சங்கச் செய்யுட்கள் சான்று கூறுகின்றன. இருக்கு வேதம் கூறுகிற 'சோம யாக'த்தைத் தமிழ் நாட்டு ஆரிய பிராமணர் தமிழ் நாட்டில் செய்ததாகச் சான்று இல்லை. ஆனால் வேள்வி (யாகம்) செய்து மது மாமிசம் அருந்தியதைச் சங்கச் செய்யுட்கள் கூறுகின்றன. சங்க காலத்தில் தமிழகத்தில் நடக்காத சோம யாகத்தைப் பிராமணர் பிற்காலத்தில் பக்தி இயக்கங்

105