பக்கம்:பழங்காலத் தமிழர் வாணிகம்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

போனார்கள். அதனால் மிளகுக்கு 'யவனப் பிரியா' என்று பெயர் உண்டாயிற்று. மிளகுக்குக் கறி என்றும் மிரியல் என்றும் பெயர் உண்டு. சோழ நாட்டுக்குச் சாவக நாட்டிலிருந்து மிளகு இறக்குமதியாமிற்று என்பதைப் பட்டினப் பாலையிலிருந்து அறிகின்றோம்.

சங்கச் செய்யுட்களிலே சேர நாட்டு மிளகும் மிளகுக் கொடியும் கூறப்படுகின்றன. குடபுலத்தில் (சேர நாட்டில்) கறிக் கொடி (கறி = மிளகு) பலா மரங்களின் மேலே படர்ந்து வளர்ந்ததை நத்தத்தனார் கூறுகிருர், ' பைங்கறி நிவந்த பலவின் நீழல்' (சிறுபாணாற்றுப் படை. அடி. 43) மலைகளில் சந்தன மரங்களின் மேலேயும் மிளகுக் கொடிகள் படர்ந்து வளர்ந்தன. 'கறி வளர் சாந்தம்' (அகம், 2:6) மலைகளில் மிளகுக் கொடி வளர்ந்தது. 'கறிவளர் அடுக்கம்' (குறும், 288:1) (அடுக்கம்-மலை) கருவூர் கதப் பிள்ளைச் சாத்தனாரும் 'கறிவளர் அடுக்க'த்தைக் கூறுகிறார். (புறம், 168:2). 'கறிவளர் சிலம்பை ' ஆவூர் மூலங் கிழார் கூறுகின்றார். (அகம், 112:14) (சிலம்பு-மலை). மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார், 'துறுகல் நண்ணிய கறியிவர் படப்பை'யைக் கூறுகிறார் (அகம், 272:10) (படப்பை-தோட்டம்). நக்கீரர் திருமுருகாற்றுப் படையில் (அடி 309) கறிக்கொடியைக் கூறுகின்றார்.

மிளகாய் இல்லாத அந்தக் காலத்திலே மிளகு உணவுக்கு மிகவும் பயன்பட்டது. உப்பு எவ்வளவு இன்றியமை யாததோ அவ்வளவு இன்றியமையாத பொருளாக மிளகு இருந்தது. காய்கறிகளை உணவாகச் சமைத்த போது அதனுடன் கறியை (மிளகை)யும் கறிவேப்பிலையையும் பயன்படுத்தினார்கள்.

'பசுங்காய்ப் போழொடு கறிகலந்து
கஞ்சக நறுமுறி யளைஇ'

என்று பெரும்பாணாற்றுப்படை (வரி 307, 308) கூறுகின்றது. நமது நாட்டில் மட்டுமன்று, உலகத்திலே மற்ற நாடுகளிலும் மிளகு தேவைப்பட்டது. ஆகவே மிளகு

111