பக்கம்:பழங்காலத் தமிழர் வாணிகம்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

யவனக் கப்பல்கள் மங்களூர்த் துறைமுகத்துக்கு அதிகமாக வருவதில்லை.

யவனர் தமிழ்நாட்டுக்கு வாணிகம் செய்ய வந்தது முக்கியமாக மிளகுக்காகவே. யவனர் தமிழர் - கடல்வாணிகம் கி.மு. முதல் நூற்றாண்டிலிருந்து கி.பி. மூன்றாம் நூற்றாண்டு வரையில் நடைபெற்றதைச் சங்கச் செய்யுள்களிலிருந்தும் யவனரின் நூல்களிலிருந்தும் அறிகின்றோம். இந்த வாணிகச் செய்தியைத் தமிழகத்தில் ஆங்காங்கே கண்டெடுக்கப்பட்ட பழங்காசுப் புதையல்களிலிருந்து கிடைத்த உரோம் தேசத்துப் பழங்காசுகள் வலியுறுத்துகின்றன.

உலக முழுவதும் அக்காலத்தில் புகழ்பெற்று இருந்த மிளகை வட இந்தியரும் உபயோகித்தனர் என்பது சொல்லாமலே அமையும். வடநாட்டார் மிளகை மரிசி என்று சொன்னார்கள். வட மொழியிலும் (சமஸ்கிருதம்) மிளகுக்கு மரிசி என்பது பெயர். மரிசி என்பது முசிறி என்பதன் திரிவு. முசிறித் துறைமுகத்திலிருந்தே மிளகு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டதனால், அந்தப் பட்டினத்தின் பெயர் மிளகுக்கு ஏற்பட்டது. முசிறி என்னும் சொல் முரசி என்று திரிந்து பிறகு மரிசி என்றாயிற்று.

கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் தென் அமெரிக்கா கண்டத்திலிருந்து மிளகாய் கொண்டு வரப்பட்டது. இப்போது மிளகாயும் உபயோகப்படுத்தப்படுகின்றது. ஆனால், மிளகின் பெருமையும் சிறப்பும் இன்றும் குறையவில்லை.

அறுவை (துணி)

தமிழ் நாட்டில் பருத்திப் பஞ்சு விளைந்தது. பருத்தியை நூல் நூற்று ஆடை நெய்தார்கள். ஆகவே பருத்தி பயிரிடும் தொழிலும், பருத்தியிலிருந்து நூல் நூற்கும் தொழிலும், நூற்ற நூலைத் துணியாக நெய்யும் நெசவுத் தொழிலும், அதனை விற்கும் வாணிபத் தொழிலும் நடை பெற்றன. தமிழகத்தில் துணி விற்கப்பட்டதோடு மட்டும் அல்லாமல் வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டது. சங்கச் செய்யுள்களிலிருந்து அக்காலத்துப் பருத்தித் தொழிலை பற்றி அறிகிறோம்.

115