பக்கம்:பழங்காலத் தமிழர் வாணிகம்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

'நோக்கு நுழைகல்லா நுண்மைய பூக்கனிந்து, அரவுரி யன்ன அறுவை' (பொருநர், 82-83) 'காம்பு சொலித் தன்ன அறுவை' (சிறுபாண், 236). இவ்வாறு பலதரமான ஆடைகள் நெய்யப்பட்டன.

அக்காலத்துத் தமிழர் சட்டை அணியவில்லை. அரையில் ஓர் ஆடையும் தோளின்மேல் ஓர் ஆடையும் ஆக இரண்டு துணிகளை மட்டும் அணிந்தார்கள். இக் காலத்தில் உடுப்பதுபோல அதிகமாக ஆடைகளை அணியவில்லை. ' உண்பது நாழி உடுப்பவை இரண்டே' (புறம், 189:5) துணியைச் சட்டையாகத் தைத்து அணியும் வழக்கமும் அக்காலத்தில் இல்லை. அரச ஊழியர்களில் முக்கியமானவர் மட்டும் மெய்ப்பை (சட்டை அணிந்தார்கள்) பாண்டிய அரசனுடைய அரசாங்கத்து ஊழியர் மெய்ப்பை (சட்டை) அணிந்திருந்தனர். பாண்டியனுடைய பொற்கொல்லன் சட்டையணிந்திருந்தான். அவனைக் கோவலன் மதுரை நகரத் தெருவில் சந்தித்தான். 'மெய்ப்பைபுக்கு விலங்கு நடைச் செலவிற் கைக்கோற் கொல்லனைக் கண்டனனாகி' (சிலம்பு, 16:107-108) மெய்ப்பை -சட்டை' பாண்டியனுடைய தூதர்களும் கஞ்சுகம் (சட்டை) அணிந்திருந்தார்கள். (சிலம்பு 26:166-172). சேரன் செங்குட்டுவனுடைய தூதர்களும் அவர்கள் தலைவனாகிய சஞ்சயனும் தலைப்பாகையும் கஞ்சுகமும் (சட்டையும்) அணிந்திருந்தனர். 'சஞ்சயன் முதலாத் தலைக்கீடு பெற்ற, கஞ்சுக முதல்வர் ஈரைஞ் தூற்றுவர்' (சிலம்பு, 26:137-138) செங்குட்டுவனுடைய ஒற்றரும் அவர்களின் தலைவனான நீலனும் கஞ்சுகம் (சட்டை) அணிந்திருந்தார். நீலன் முதலிய கஞ்சுக மாக்கள் (சிலம்பு, 28:80) அரசாங்கத்து முக்கிய ஊழியர் தவிர, சங்க காலத்தில் மற்ற யாவரும் சட்டையணியவில்லை.

தமிழகத்திலிருந்து வெளி நாடுகளுக்கும் துணி ஏற்றுமதியாயிற்று. பாடலிபுரம் காசிபோன்ற கங்கைக்கரைப் பிரதேசங்களுக்குத் தமிழ்நாட்டுத் துணிகள் அனுப்பப் பட்டன, கவுடல்யரின் அர்த்த சாத்திரம் மாதுரம் என்னும் துணியைக் கூறுகின்றது. பாண்டி நாட்டு மதுரையிலிருந்து சென்றபடியால் அதற்கு மாதுரம் என்று பெயர் கூறப்பட்டது.

117