பக்கம்:பழங்காலத் தமிழர் வாணிகம்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அர்த்த சாத்திரம் சந்திரகுப்த மௌரியன் காலத்தில் கி.மு, மூன்றாம் நூற்றாண்டில் எழுதப்பட்டது என்று கூறப்படுகின்றபடியினால் அக்காலத்திலேயே தமிழ்நாட்டு ஆடைகள், வட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன என்பது தெரிகின்றது. தமிழ்நாட்டிலிருந்து ஆடைகள் சாவக நாட்டுக்கும் கிழக்கிந்தியத் தீவுகளாகிய இந்தோனேஷியாவுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டிருக்க வேண்டும். அக்காலத்தில், அந்நாடுகளில் பஞ்சும் துணியும் உற்பத்தி செய்யப்படவில்லை. ஆனால், தமிழகத்துத் துணிகள் அங்குக் கொண்டு போகப்பட்டதற்குச் சான்றுகள் இல்லை.

தமிழர் கலிங்க தேசத்துக்குக் கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலேயே சென்று வாணிபம் செய்தனர் என்று ஹத்தி கும்பாகுகைச் சாசனம் கூறுகின்றது. கலிங்க நாட்டுக்குச் சென்று வாணிகஞ் செய்த தமிழர் அங்கிருந்து பருத்தி யாடைகளைத் தமிழகத்துக்குக் கொண்டு வந்தனர், கலிங்க நாட்டிலிருந்து வந்த ஆடைக்கு கலிங்கம் என்று பெயர் கூறப்பட்டது. தமிழகத்தில் கலிங்க ஆடைகள் அதிகமாக விற்கப்பட்டன, கலிங்கத் துணிகளுக்குச் சிறப்புப் பெயராக வழங்கப்பட்டது. கலிங்கம் என்ற பெயர் பிற்காலத்தில் எல்லாத் துணிகளுக்கும் பொதுப் பெயராக வழங்கப்பட்டது. சங்கச் செய்யுட்களில் கலிங்கம் என்றும் பெயர் பொதுவான எல்லாத் துணிகளுக்கும் வழங்கப்பட்டதைக் காண்கின்றோம்.

தமிழ் நாட்டிலே அக்காலத்திலும் பட்டாடைகள் உடுத்தப்பட்டன. செல்வர் பருத்தியாடையையும் பட்டாடையும் அணிந்தார்கள் 'பட்டு நீக்கித் துகில் உடுத்தும்' என்று பட்டினப்பாலை (அடி. 105) கூறுகின்றது. 'கொட்டைக் கரைய பட்டுடை' என்று பொருநர் ஆற்றுப் படை (அடி 155) கூறுகின்றது. 'அரத்தப்பூம்பட்டு அரை மிசை உடீஇ, என்று சிலப்பதிகாரம் கூறுகின்றது. (சிலம்பு, 4:86) பட்டுத்துணி தமிழகத்தில் உற்பத்தியாகவில்லை. அந்தக் காலத்திலே பட்டு சீன நாட்டில் மட்டும் உற்பத்தியாயிற்று, வேறெங்கும் அக்காலத்தில் உற்பத்தியாகவில்லை. சீனர்கள் பட்டுத் துணியைச் சாவக நாட்டுக்குக் கொண்டு வந்து விற்றார்கள், வாணிகத்துக்காகச் சாவக நாட்டுக்குச்

118