பக்கம்:பழங்காலத் தமிழர் வாணிகம்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சென்ற தமிழர் அங்கிருந்து பட்டுத் துணிகளைத் தமிழ் நாட்டுக்குக் கொண்டு வந்தார்கள். தமிழர்களிடமிருந்து பட்டுத் துணிகளை யவனர் வாங்கிக் கொண்டு போனார்கள். சீன நாட்டுப் பட்டு சாவகத் தீவுக்கு வந்து அங்கிருந்து தமிழகத்துக்குக் கொண்டு வரப்பட்டு, இங்கிருந்து யவன நாட்டுக்குக் கொண்டு போகப்பட்டது. பாரசீகம் எகிப்து ரோமாபுரி முதலான நாடுகளுக்குப் (பட்டுத்துணி சீன நாட்டிலிருந்து மத்திய ஆசியா வழியாகவும் தரை வழியாகச் சென்றது). பாண்டி நாட்டுத் தொண்டித் துறைமுகத்திலே கிழக்குக் கடலிலிருந்து (சாவக நாட்டிலிருந்து வந்த பொருள்களில்) பட்டுத் துணியும் கூறப்படுகின்றது.

' ஓங்கிரும் பரப்பின்
வங்க வீட்டத்துத் தொண்டியோர் இட்ட
அகிலும் துகிலும் ஆரமும் வாசமும்
தொகு கருபூரமும் சுமந்துடன் வந்த
கொண்டலொடு புகுந்து'

(சிலம்பு, 14: 106-110)

இவை கிழக்குக் கடல்களிலிருந்து கொண்டல் (கிழக்குக்) காற்றின் உதவியினால் கப்பல்களில் வந்தவை. இவற்றில் துகில் என்பது பட்டுத்துணி கிழக்கிலிருந்து வந்த பட்டைத் தமிழ் நாட்டிலிருந்து அரபியரும் யவனரும் வாங்கிக் கொண்டு போய் மேற்கு நாடுகளில் விற்றார்கள்.

தமிழ் நாட்டிலுண்டான பருத்தித் துணிகளுக்குச் சிவப்பு, நீலம், மஞ்சள் முதலான சாயம் காட்டினார்கள். ஆனால், வெண்மையான துணிகளையே தமிழர் பெரிதும் விரும்பினார்கள். வெள்ளையாடை சிறப்பாகவும் உயர்வாகவும் மதிக்கப்பட்டது. பிறந்த நாளாகிய வெள்ளணி நாளிலே வெள்ளாடையடுத்துவது சிறப்பாக இருந்தது.

சங்க காலத்திலே பருத்திப் பயிர் செய்வதும் நூல் நூற்பதும் துணி செய்வதும் ஆடை. விற்பதுமாகிய தொழில் சிறப்பாக நடந்தது. துணிகளை விற்ற வணிகருக்கு அறுவை வாணிகர் என்று பெயர் கூறப்பட்டது. மதுரையில் இருந்த இளவேட்டனார் என்னும் புலவர் அறுவை வாணிகம் செய்தார். ஆகையால் அவர் மதுரை அறுவை வாணிகன் இள

119