பக்கம்:பழங்காலத் தமிழர் வாணிகம்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உமணர் ஒரே ஊரில் தங்காமல் ஊர்கள் தோறும் சென்றனர். அவர்கள் குடும்பத்தோடு நிலையா வாழ்க்கையை நடத்தினார்கள்.

'உவர்விளை உப்பின் குன்றுபோல் குப்பை
பாலே உய்த்துப் பகரும் நிலையா வாழ்க்கைக்
கணங்கொள் உமணர்'

(நற், 138:1-3)

பாரமான வண்டியை இழுத்துக் கொண்டு எருதுகள் மேட்டில் ஏறியும் பள்ளத்தில் இறங்கியும் செல்லும் போது வண்டியின் அச்சு முறிந்து விடுவதும் உண்டு. அதன் பொருட்டு ஆயத்தமாக சேம அச்சு கொண்டு போனார்கள் (புறம், 102: 1-2), உமணர் பாதிரிப் பூவையும் அலரிப் பூவையும் தொடுத்துக் கட்டின பூமாலையைத் தலையில் அணிந்து காலில் செருப்பு அணித்து கையில் தடி. ஏந்திச் சென்றார்கள்.

'அத்தப் பாதிரித் துய்த்தலைப் புதுவீ
எரியிதழ் அலரியொடு இடைபட விரைஇ
வண்தோட்டுத்தொடுத்த வண்டுபடு கண்ணித்
தோல்புதைச் சிற்றடிக் கேலுடை யுமணர்'

(அகம், 191:1-4)

உமணர் ஆங்காங்கே வழியில் தங்கி உணவு சமைத்து உண்டு ஓய்வு கொண்டு மீண்டும் பிரயாணஞ் செய்தார்கள் (அகம், 159: 1-4). சில இடங்களில் சமைக்கவும் உணவும் நீர் கிடைக்காது. அவ்விடங்களை அகழ்ந்து குழி உண்டாக்கிச் சுரக்கும் நீரை உண்டனர் (அகம், 295; 9-14). தீக்குச்சி இல்லாத காலமாகையால் அவர்கள் தீக்கடைகோலினால் தீயுண்டாக்கிச் சோறு சமைத்தார்கள் (அகம்:, 1643:5-8) .

போகிற வழியில் தங்கி ஊருக்குள் சென்று உப்பு விற்றார்கள். உமண ஆடவர் ஊர்க்குள் சென்று உப்பு விற்பதில்லை. உமணப் பெண்கள் உப்பை ஊர்க்குள் கொண்டு போய் விற்றார்கள். அவர்கள் காசுக்கு உப்பு விற்கவில்லை , உப்பை நெல்லுக்கு மாற்றினார்கள்.

'நெல்லும் உப்பும் நேரே, ஊரீர்
கொள்ளீரோ வெனச் சேரிதொறும் நுவலும்'

(அகம், 390 : 8-9)

122