பக்கம்:பழங்காலத் தமிழர் வாணிகம்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஞாலங் காவலர் கடைத் தலைக்
காலைத்தோன்றினும்'

(புறம், 225: 11-14)

என்றும்,

'மறத்துறை விளங்கிய மன்னவன் கோயிலும்
வால் வெண் சங்கொடு வகைபெற் றோங்கிய
காலை முரசங் கனைகுரல் இயம்ப'

(சிலம்பு , 14: 12-14)

என்றும் கூறுவதனால் அறிகின்றோம். (கோயில் அரண்மனை.)

பற்பல நூற்றாண்டுகளாக மகளிர் சங்கு வளைகளை அணித்து வந்த வழக்கம் சமீபகாலம் வரையில் இருந்தது. கி.பி. 18 ஆம் நூற்றாண்டு முதல், முஸ்லீம் தொடர்பு ஏற்பட்ட பிறகு கண்ணாடி வளையல் அணியும் வழக்கம் ஏற்பட்டது. ஆகவே பழைய சங்கு வளை அணியும் வழக்கம் பிற்காலத்தில் மறைந்து போயிற்று. சங்க காலத்திலே கடலினடியிலிருந்து சங்கு எடுக்கும் தொழிலும் சங்குகளை வளையல்களாக அறுக்கும் தொழிலும் வளையல் விற்கும் வாணிகமும் மகளிர் வளையல் அணிந்த வழக்கமும் இருந்தன. காதுகளில் சங்குக் குழையணிவதும் விரல்களில் சங்கு மோதிரம் அணிவதும் கூட அக்காலத்து வழக்கமாக இருந்தது.

முத்து

தமிழ் நாட்டுக் கடலிலே முத்து உண்டாயிற்று. கடலிலே உண்டாகிற முத்துச் சிப்பி என்னும் ஒருவகைக் கிளிஞ்சிலில் முத்து உண்டாயிற்று. முக்கியமாக ஆறுகள் கடலில் கலக்கிற புகர் முகங்களிலே முத்துச் சிப்பிகள் அதிகமாக உண்டாயின. பாண்டி நாட்டு முத்து பேர்போனது 'தென் கடல் பவ்வத்து முத்து' என்று புகழப்படுகின்றது.

முத்து நவரத்தினங்களில் ஒன்றாக மதிக்கப்பட்டது. ஆகவே அது விலை மதிப்புள்ளது. அரசர்கள் 'ஏகவடம்' என்னும் முத்து மாலைகளை அணிந்தார்கள். ஏகவடம் அரசர்களுக்குரிய அடையாள அணிகளில் ஒன்று. செல்வர் வீட்டுப் பெண்களும் அரச குமாரிகளும் இராணிகளும் முத்து

128