பக்கம்:பழங்காலத் தமிழர் வாணிகம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

என்று (பட்டினப்பாலை 28-30) அவர் கூறுகிறார். உப்பை நெல்லுக்கு மாற்றியதை உலோச்சனார் கூறுகிறார். 'உமணர் தந்த உப்பு நொடை, நெல்' (நற்றிணை, 254:6)

கடற்கரையோரத்திலே நெய்தல் நிலத்தில் வசித்த பரதவர் கடலிலே சென்று சுறா, இறால் முதலான மீன்களைப் பிடித்து வந்தார்கள். அவர்கள் கொண்டுவந்த மீனைப் பரதவ மகளிர் எளிதில் தானியத்துக்கு மாற்றினார்கள் என்று குன்றியனார் கூறுகிறார். 'இனிது பெறு பெருமீன் எளிதினிற் மாறி' (நற்றிணை, 239:3) பரதவ மகளிர் கடல் மீனை நெல்லுக்கு மாற்றியதை நக்கீரரும் கூறுகிறார்: 'பசுமீன் தொடுத்த வெண்ணெல் மாஅத், தபிர்மிதி மிதவை யார்த் துவம்' (அகம், 340; 14-15). 'உப்பு நொடை நெல்லின் மூரல் வெண்சோறு' என்று குடவாயில் நீரத்தனார் கூறுகிறார் (அகம். 60:4).

பரதவ மகளிர் கடல் மீனைத் திருவிழா நடக்கிற ஊர் களில் கொண்டுபோய் எளிதில் விற்றதைச் சீத்தலைச் சாத்தனார் கூறுகிறார்.

'திமிலோன் தந்தக டுங்கண் வயமீன்
தழையணி அல்குல் செல்வத் தங்கையர்
விழவயர் மறுகின் விலையெனப் பகரும்
நானலஞ் சிறுகுடி' (அகம், 320:2-3)

மீனை நெல்லுக்கு மாற்றினார்கள். பண்ட மாற்றினால் கிடைத்த நெல்லை அம்பியில் ஏற்றிக்கொண்டு கழிகளின் வழியே வந்ததைப் பரணர் கூறுகிறார்.

‘மீன்நொடுத்து நெல் குவைஇ
மிசை அம்பியின் மனைமறுக்குந்து'

(புறம், 343: 1-2)

உழவர் மகளிர் தெருக்களில் பூ வீற்றதைப் பாலை பாடிய பெருங்கடுங்கோ கூறுகிறார்.

'துகிலிகை யன்ன துய்த்தலைப் பாதிரி
வாலிதழ் அலரி வண்டுபட ஏந்திப்
புதுமலர் தெருவுதொறும் நுவலும்
நொதுமலாட்டி' (நற்றினை, 118:8-11)

16