பக்கம்:பழங்காலத் தமிழர் வாணிகம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

(சிலம்பு -மலை; வேழத்துக் கோடு-யானைத் தந்தம்: ஓரி-ஒரி என்னும் தலைவன்)

காசு (நாணயம்)

இவற்றிலிருந்து சங்க காலத்தில் பண்ட மாற்று வாணிகம் நடந்ததை அறிகிறோம். ஆனால், பண்டமாற்று வாணிகம் நடந்த அந்தக் காலத்தில் காசு வழங்கப்படவில்லை. என்று கருதுவது கூடாது. அதே காலத்தில், செம்பு, வெள்ளி, பொன் காசுகளும் வழங்கி வந்தன. அந்தக் காசுகள்: விலையுயர்ந்த பொருள்களை வாங்குவதற்குப் பயன்படுத்தப்பட்டன . பண்டமாற்று நடந்ததைச் சங்க நூல்களிலிருந்து தெரிந்து கொள்வது போலவே, காசுகள் வழங்கி வந்ததையும் சங்கச் செய்யுட்களிலிருந்து அறிகிறோம். அந்தக் காசுகள் நெல்லிக் காயின் வடிவம்போல உருண்டு சிறிது தட்டையாக இருந்தன என்று அறிகிறோம். இதனை மதுரைக் கொல்லன் வெண்ணாகனார் கூறுகிறார். பாலை நிலத்து வழியிலே இருந்த நெல்லி பரங்களிலிருந்து உதிர்த்துள்ள நெல்லிக்காய்கள், பொற் காசுகள் உதிர்ந்து கிடப்பவுபோலக் காணப்பட்டன என்று அவர் கூறுகிறார்.

'புல்விலை நெல்லிப் புகரில் பசுங்காய்
கல்வதர் மருங்கில் கடுவளி உதிர்ப்பப்
பொலஞ்செய் காசிற் பொற்பத்தா அம் அத்தம்'

(அகம், 353: 6-8)

(புகர் இல்-துளை இல்லாத, கெட்டியான; கடுவளி-பெருங் காற்று; பொலம் செய் காசு-பொன்னால் செய்த காசு)

உகா மரத்தின் பழம் போல மஞ்சள் நிறமாக பொற் காசுகள் இருந்ததைக் காவன் முல்லைப் பூதனார் கூறுகிறார்.

'குயில்கண் அன்ன குரூஉக் காய்முற்றி
மணிக்கா சன்ன மானிற இருங்கனி
உகாஅ மென்சின உதிர்வன கழியும்
வேனில் வெஞ்சுரம்'

(அகம், 293; 6-9)

(குரூஉ-குரு - நிறம்; காசு அன்ன -காசு போன்று; உகா-உகா மரம்; சினை-கிளை)

19