பக்கம்:பழங்காலத் தமிழர் வாணிகம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


3. போக்குவரத்து சாதனங்கள்

வாணிகப் பொருள்கள் எல்லாம் ஒரே இடத்தில் உற்பத்தியாவதில்லை . வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு பொருள்கள் உற்பத்தியானபடியால், அப்பொருள்களையெல்லாம் ஓரிடத்தில் கொண்டு வந்து சேர்ப்பதற்கு வாணிகர் கால்நடைகளையும் வண்டிகளையும் பயன்படுத்தினார்கள், ஆனால், இக்காலத்தில் உள்ள உந்து வண்டிகள் இரெயில் வண்டிகள் , வான ஊர்திகள் போன்ற விரைவான போக்கு வரத்துச் சாதனங்கள் இருப்பது போல அக்காலத்தில் இல்லை. ஆகவே அவர்கள் எருது, கழுதை, வண்டி, படகு, பாய்க் கப்பல்களைப் பயன்படுத்தினார்கள். எருமைக்கடாவை ஏர் உழுவதற்குப் பயன்படுத்தினார்கள். எருமைகளைப் பொதி சுமக்கவும் வண்டியிழுக்கவும் பயன்படுத்தவில்லை. பொதி சுமக்கவும் வண்டியிழுக்கவும் எருதுகள் பயன்பட்டன. எருதுக்கு அடுத்தபடியாகக் கழுதை பொதிசுமக்கப் பயன்பட்டது. கழுதைகள் வண்டியிழுக்கப் பயன்படவில்லை ,

சிந்து, பாரசீகம், அரபி நாடுகளிலிருந்து குதிரைகள் அக்காலத்தில் கொண்டு வரப்பட்டன. அவை கடல் வழியாகக் கப்பல்களில் கொண்டு வரப்பட்டன. குதிரைகளை அரசர் போர் செய்யப் பயன்படுத்தினார்கள். நால்வகைப் படைகளில் குதிரைப் படையும் ஒன்று. தேர்ப் படையில் தேர்களை (போர் வண்டிகளை) இழுக்கவும் குதிரைகள் பயன்பட்டன. குதிரை வண்டிகளை அரசரும் செல்வரும் பயன்படுத்தினார்கள். ஆனால், அக்காலத்தில் தமிழர் குதிரைகளைப் பொதி சுமக்கவும் வாணிகப் பொருள்களை ஏற்றிக்கொண்டு போகிற வண்டிகளை இழுக்கவும் ஏர் உழவும் பயன்படுத்தவில்லை.

22