பக்கம்:பழங்காலத் தமிழர் வாணிகம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பலாப்பழம் அளவாகச் சிறுசிறு பொதிகளாகக் கட்டப் பட்ட மிளகு மூட்டைகளைக் கழுதைகளின் மேல் ஏற்றிக் கொண்டு வணிகச்சாத்தர் ஊர்ப் பயணஞ் சென்றனர். இடைவழியில் சுங்கச் சாவடிகளில் சுங்கஞ் செலுத்தினார்கள் . சுங்கச் சாவடிகளில் வில் வீரர்கள் காவல் இருந்தனர்.

'தடவு நிலைப் பலவின் முழுமுதற் கொண்ட
சிறுசுளைப் பெரும்பழங் கடுப்ப மிரியல்
புணர்ப்பொறை தாங்கிய வடுவாழ் நோன்புறத்து
அணர்ச்செவிக் கழுதைச் சாத்தொடு வழங்கும்
வில்லுடை வைப்பின் வியன்காட் டியவு.'

(பெரும்பாண், 77-82.
கடியலூர் உருத்திரக்கண்ணனார்.)

(மிரியல்-மிளகு)

கிழக்குப் பக்கத்து நெய்தல் நிலத்தைச் சார்ந்த கடற்கரைப் பக்கங்களில் உண்டான உப்பை, மூட்டைகளாகக் கட்டிக் கழுதைகளின் மேல் ஏற்றிக் கொண்டு மேற்கேயுள்ள ஊர்களுக்கு வணிகர் சென்றனர்.

'அணங்குடை முந்நீர் பரந்த செருவின்
உணங்குதிறம் பெயர்த்த வெண்கல் அமிழ்தம்
குடபுல மருங்கின் உய்ம்மார் புள்ளோர்த்துப்
படையமைத் தெழுந்த பெருஞ்செ யாடவர்
நிரைபரப் பொறைய நரைப்புறக் கழுதைக்
குறைக்குளம் புதைத்த கற்பிறழ் இயவு .'

(அகம், 207: 1-6. சேத்தம்பூதனார்)

(வெண்கல் அமிழ்தம் - உப்பு ; உய்ம்மார் கொண்டுபோக; புள்ஓர்த்து-நிமித்தம் பார்த்து)

வணிகச் சாத்தரை வென்று கொள்ளைக்காரர் வழி பலுத்ததைக் கடியலூர் உருத்திரங்கண்ணனார் கூறுகிறார். .

'சாத்தெறிந்து
அதர்கூட் டுண்னும் அணங்குடைப் பகழிக்
கொடுவில் ஆடவர்.'

(அகம், 167: 7-9)

26