பக்கம்:பழங்காலத் தமிழர் வாணிகம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாண்டி நாட்டவராகிய பருதன் இளநாகனாரும் இதைக் கூறுகிறார்.

' மழை பெயல் மறந்த கழைத்திரங் கியவில்
செல்சாத் தெறியும் பண்பில் வாழ்க்கை
வல்வில் இளையார்'

(அகம், 245: 5-7)

(கழை-மூங்கில்; சாத்து-வணிகர் கூட்டம்; இளையார்-வீரர்)

சங்ககாலத்து வாணிபம் தரைவழியாகவும் கடல்வழியாகவும் நடந்தது. தரை வழியாக வாணிகம் செய்த பெரு வாணிகருக்கு மாசாத்துவன் என்பது பெயர். அக்காலத்தில் சாலைகள் அதிகமாக இல்லை. சாலைகளிலும் எல்லைப்புறங்களில் கொள்ளைக்காரர் இருந்தார்கள். கடல் வழியாக நடந்த வாணிகம் தரை வணிகத்தைவிடச் சற்று அதிகமாகவும் நன்றாகவும் நடந்தது. கடல் வாணிகத்தை நடத்தின பெரிய வாணிகருக்கு மாநாய்கன் (மாநாவிகன். மா + நாவிகன்) என்பது அதியர். கடற்பிரயாணத்திலும் காற்று, புயல்களினால் கப்பல்களுக்குச் சேதம் உண்டாயின, கடற் கொள்ளைக்காரர் அதிகம் இல்லை. கடல் வாணிகம் இரண்டு விதமாக நடந்தது. கரைவழி ஓரமாகவே கப்பல்களை ஓட்டி நடத்தின வாணிகம் ஒன்று. கரைவழி ஓரமாகச் செல்லாமல் நடுக்கடலில் கப்பல்களைச் செலுத்திக் கடல் கடந்த நாடுகளுக்குப் போய் செய்த வாணிகம் இன்னொன்று.


தரை வழி வாணிகமாக இருந்தாலும், கடல்வழி வாணிகமாக இருந்தாலும், இக்காலத்து வசதிகளைப் போல, அக்காலத்தில் வசதிகள் இல்ல. ஆனாலும் அந்தக் கடினமான சூழ்நிலைகளிலும் தரை வாணிகமும், கடல் வாணிகமும் நடந்தன, தமிழ்நாட்டு வாணிகர் அயல் நாடுகளுக்குச் சென்று வாணிகஞ் செய்தார்கள், மேற்கே இத்தாலி, கிரேக்கதேசம் (யவன நாடு) முதல் கிழக்கே சாவக நாடு (கிழக்கத்தியத் தீவுகள்) பர்மா, மலாயா வரையிலும் தெற்கே கன்னியாகுமரி முதல் வடக்கே கங்கைக்கரைப் பிரதேசம் வரையிலும் அக்காலத்துத் தமிழர் வாணிகம் நடந்தது.

27