பக்கம்:பழங்காலத் தமிழர் வாணிகம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கடலில் சென்று வாணிகஞ் செய்தது போலவே தரை வழியாகவும் பல நாடுகளுக்குப் போய் வாணிகம் செய் தார்கள். தமிழ் நாட்டில் மட்டும் அல்லாமல் தரை வழியாக வட இந்திய நகரங்களுக்கும் போய் வாணிகஞ் செய்தார்கள். பெரிய வாணிகம் செய்தவர்களுக்குப் பெருங்குடி வாணிகர் என்பது பெயர். அயல் நாடுகளுக்கு வாணிகஞ் செய்யச் சென்றவர் ஒன்று சேர்ந்து கூட்டமாகச் சென்றார்கள். வணிகக் கூட்டத்துக்கு வணிகச்சாத்து என்பது பெயர்.

தரை வாணிகம்

அயல் நாடுகளுக்குத் தரை வழியாகச் சென்று வாணிகஞ் செய்த சாத்தர் கழுதைகள், எருதுகள், வண்டிகள் ஆகியவற்றில் வாணிகப் பொருள்களை ஏற்றிக்கொண்டு கூட்டமாகச் சென்றார்கள். அவர்கள் போகிற வழிகளில், மனித வாசம் இல்லாத பாலை நிலங்களில் வழிபறிக் கொளைக்காரர் வந்து கொள்ளையடித்தார்கள். அவர்களை அடித்து ஓட்டுவதற்காக வாணிகச் சாத்தர் தங்களோடு வில் வீரர்களையும் அழைத்துக் கொண்டு போனார்கள். தமிழ் நாட்டில் மட்டும் அன்று; இந்தியா தேசம் முழுவதுமே அக்காலத்தில் வழிப்பறிக் கொள்ளை செய்த வேடர்கள் இருந்தார்கள். ஆகையினாலே வாணிகச் சாத்தர் அயல்நாடுகளுக்கு வாணிகஞ் செய்யப் போகும்போது கூட்டமாகச் சேர்ந்து போனதுமல்லாமல் தங்களோடு படை வீரர்களையும் அழைத்துக் கொண்டு போனார்கள். வாணிகச் சாத்தை வேடர்கள் கொள்ளையடித்ததைச் சங்க நூல்கள் கூறுகின்றன, மருதன் இளநாகனார், பாலை நிலத்தின் வழியே சென்ற வாணிகச் சாத்தைக் கொள்ளையிட்ட வேடரைக் கூறுகிறார்,

'மழைபெயல் மறந்த கழைதிரங்கு இயவில்
செல்சாத்து எறியும் பண்பில் வாழ்க்கை
வல்வில் இளையர்.'

(அகம், 245; 5-7)

கடியலூர் உருத்திரங் கண்ணனாரும், வழிப்பறிக் கொள்ளயிட்ட வில் வேடரைக் கூறுகிறார்.

29