பக்கம்:பழங்காலத் தமிழர் வாணிகம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

'சாத்தெறிந்து
அதர்கூட் டுண்ணும் அணங்குடைப் பகழிக்
கொடுவில் ஆடவர்.'

(அகம், 167: 7-9)

பலாப்பழம் அளவாகக் கட்டின மிரியல் (மிளகு) பாட்டைகளைக் கழுதைகளின் முதுகின் மேல் ஏற்றிக்கொண்டு வாணிகச் சாத்தர் தங்களுடைய வில் வீரர்களோடு சென்றனர். ஆங்காங்கே வழியில் இருந்த சுங்கச் சாவடிகளில் அரசனுடைய அலுவலர்கள் அவர்களிடமிருந்து சுங்கம் வாங்கினார்கள். இதைக் கடியலூர் உருத்திரக்கண்ணனார் கூறுகிறார்.

'சுரிகை நுழைந்த சுற்றுவீங்கு செறிவுடைக்
கருவி லோச்சிய கண்ணகன் எறுழ்த்தோள்
கடம்பமர் நெடுவேள் அன்ன மீளி
உடம்பிடித் தடக்கை யோடா வம்பலர்
தடவு நிலைப் பலவின் முழுமுதற் கொண்ட
சிறுசுளைப் பெரும்பழம் கடுப்ப மிரியல்
புணர்ப் பொறைதாங்கிய வடுவாழ் நோன் புறத்து
அணர்ச் செவிக் கழுதைச் சாத்தோடு வழங்கும்
உல்குடைப் பெருவழிக் கவலை காக்கும்
வில்லுடை வைப்பின் வியன்காட் டியவு'

(பெரும்பாண், 73-82)

வாணிகச்சாத்துடன் பாலை நிலத்து மறவர் செய்த போரை மாங்குடி மருதனார் கூறுகிறார்.

'களரி பரந்த கல்நெடு மருங்கில்
விளரூன் தின்ற வீங்குசிலை மறவர்
மைபடு திண்டோள் மலிர ஆட்டிப்
பொறைமலி கழுதை நெடு நிரை தழீஇய
திருத்துவான் வயவர் அருந்தலை துமித்த
படுபுலாக் கமழும் ஞாட்பு'

(அகம், 89; 9-14)

30