பக்கம்:பழங்காலத் தமிழர் வாணிகம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வேறு நாடுகளுடன் வாணிகம் செய்த வாணிகச் சாத்துக்கு அக்காலத்தில் அப்படிப்பட்ட துன்பங்கள் இருந்தன. அவர்களுடைய பொருளுக்கும் உயிருக்கும் ஆபத்து இருந்தது. அந்த ஆபத்துக்களையும் கருதாமல் அவர்கள் வாணிகம் செய்தார்கள். சாத்துக்களின் தலைவனான வாணிகனுக்கு மாசாத்துவான் என்று பெயர் வழங்கிற்று. காவிரிப்பூம்பட்டினத்திலிருந்த மாசாத்துவர்களில் ஒருவன் கோவலனுடைய தந்தையாகிய மாசாத்துவானும் ஒருவன். அவன் சோழ அரசனுக்கு அடுத்த நிலையில் பெருங்குடி மக்களில் முதல் குடிமகனாக இருந்தான், அவனைச் சிலப்பதிகாரம் இவ்வாறு கூறுகிறது.

'பெரு நிலம் முழுதாளும் பெருமகன் தலைவைத்த
ஒருதனிக் குடிகளோடு உயர்ந்தோங்கு செல்வத்தான்
வரு நிதி பிறர்க் காற்றும் மாசாத்துவா னென்பான்
இரு நிதிக் கிழவன்மகன் ஈரெட்டாண் டகவையான்.'

(சிலம்பு, மங்கல வாழ்த்து)

கடல் வாணிகம்

கடல் வாணிகத்தையும் அக்காலத் தமிழர் வளர்த்தார்கள். மரக்கலங்களாகிய நாவாய்களில் உள் நாட்டுச் சரக்குகளை ஏற்றிக்கொண்டு போய் அயல் நாடுகளில் விற்று, அந்நாடுகளிலிருந்து வேறு பொருள்களை ஏற்றிக்கொண்டு வந்தார்கள், தங்கள் நாவாய்களை அவர்கள் கடலில் கரையோரமாகச் செலுத்திக் கொண்டுபோய் கரையோரமாக இருந்த ஊர்களில் தங்கிப் பொருள்களை இறக்குமதி ஏற்றுமதி செய்தார்கள். ஆனால், தமிழ்நாட்டுக்குக் கிழக்கே வெகு தூரத்தில், ஆயிரம் மைலுக்கப்பால் இருந்த சாவகம் (கிழக் கிந்தியத் தீவுகள்) காழகம் (பர்மா) கடாரம் முதலான கடல் கடந்த நாடுகளுக்குச் சென்றபோது நடுக்கடலில் நாவாய் ஓடடிச் சென்றார்கள். தொல்காப்பியர் காலத்துக்கு கி.மு. 8 ஆம் நூற்றாண்டுக்கு முன்பே தமிழர் கடல்வாணிகம் செய்து கொண்டிருந்தார்கள். அக்காலத்துத் தமிழர் , கடலில் பிரயாணஞ் செய்யும்போது தங்களுடன் மகளிரை

31