பக்கம்:பழங்காலத் தமிழர் வாணிகம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தேசத்தில் வாணிகஞ் செய்த தமிழர் கலிங்க நாட்டுப் பொருள்களைத் தமிழகத்துக்கும் தமிழகத்துப் பொருள்களைக் கலிங்க நாட்டுக்கும் கொண்டு போய் விற்றார்கள். கலிங்க நாட்டிலிருந்து தமிழ் நாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட முக்கியமான பொருள்: பருத்தித் துணி, பெருவாரியாகக் கலிங்கத் துணி தமிழ் நாட்டில் இறக்குமதியாயிற்று. கலிங்கத்திலிருந்து வந்தபடியால் அத்துணி கலிங்கத் துணி என்று சிறப்பாகப் பெயர் பெற்றது. பிறகு காலப்போக்கில் கலிங்கம் என்னும் பெயர் துணிகளுக்குப் பொதுப் பெயராக வழங்கப் பட்டது. சங்க நூல்களில் துணிக்குப் பெயராகக் கலிங்கம் என்னும் சொல் வழங்கப்பட்டிருக்கிறது. கலிங்க நாட்டிலிருந்து அக்காலத்தில் தமிழ் நாட்டுக்கு வந்த இன்னொரு பொருள் சந்தனக் கல், 'வடவர் தந்த வான் கேழ் வட்டம்.'

ஆந்திர நாட்டிலே பேர் போன அமராவதி நகரத்திலே (தான்ய கடகம்) சங்க காலத்திலே தமிழ் வாணிகர் சென்று வாணிகஞ் செய்தனர். அங்கிருந்த அமராவதி பௌத்தக் தூபி கி.மு. 200 இல் தொடங்கி கி.பி. 200 வரையில் கட்டப்பட்டது. அந்தக் கட்டிடத்தைக் கட்டுவதற்குப் பலர் பல வகையில் உதவி செய்தார்கள். அப்போது அங்கு வாணிகஞ் செய்து கொண்டிருந்த தமிழ் வாணிகரும் அக் கட்டிடம் கட்டுவதற்கு உதவி செய்தனர். தமிள (தமிழ்) கண்ணன் என்னும் வாணிகனும் அவனுடைய தம்பியாகிய இளங்கண்ணனும் அவர்களுடைய தங்கையாகிய நாகையும் அமராவதி தூபி கட்டுவதற்குக் கைங்கரியம் செய்துள்ளனர். இந்தச் செய்தி அங்கிருந்து கிடைத்த ஒரு கல் சாசனத்தினால் தெரிகிறது. 3 அடி உயரமும் 2 அடி 8 அங்குல அகலமும் உள்ள ஒரு கல்லில் பிராமி எழுத்தினால் எழுதப்பட்ட ஒரு சாசனம் இதைக் கூறுகிறது. இப்போது இந்தக் கல் இங்கிலாந்து தேசத்துக்குக் கொண்டு போகப்பட்டு அங்கு இலண்டன் மாநகரத்துக் காட்சி சாலையில் வைக்கப்பட்டிருக்கிறது. இதனாலும் கலிங்க நாட்டில் தமிழர் வாணிகஞ் செய்த செய்தி அறியப்படுகிறது.[1]


  1. No. 80 P. 20. Notes on the Amaravati Stupa. by J. Bargess. (18/2 Archaeology Survey of South India)

35