பக்கம்:பழங்காலத் தமிழர் வாணிகம்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
முகவுரை

'ங்க காலத் தமிழர் வாணிகம்' என்னும் இந்தப் புத்தகம் கடைச்சங்க காலத்தில் (அதாவது கி.மு. இரண்டாம் நூற்றாண்டு முதல் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு வரையில்) தமிழர் நடத்திய வாணிகத்தைப் பற்றிக் கூறுகிறது. அந்தக் காலத்துப் பழந்தமிழர், பாரத தேசத்தின் வடக்கே கங்கைக்கரை (பாடலிபுரம்) முதலாகக் கிழக்குக்கரை மேற்குக்கரை நாடுகளில் நடத்திய வாணிகத்தைப் பற்றியும் தமிழகத்துக்கப்பால் கிழக்கே இலங்கை, சாவக நாடு (கிழக் கிந்தியத் தீவுகள்), மலேயா, பர்மா முதலான கடல் கடந்த நாடுகளோடு செய்த வாணிகத்தைப் பற்றியும், மேற்கே அரபுநாடு, அலக்சாந்திரியம் (எகிப்து), உரோம் சாம்ராச் சியம் (யவன தேசம்) ஆகிய நாடுகளுடனும் செய்த வாணி கத்தைப் பற்றியும் கூறுகிறது. அந்தப் பழங்காலத்து வாணிகச் செய்திகளைச் சங்ககாலத்து நூல்களை ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்டது. மற்றும் தாலமி, பிளைனி முதலான யவன ஆசிரியர் எழுதின குறிப்புகளிலிருந்தும் 'செங்கடல் வாணிகம்' என்னும் நூலிலிருந்தும், புதைபொருள் ஆய்வுகளிலிருந்தும் கிடைத்த செய்திகளிலிருந்தும் கிடைக்கும் சான்றுகளைக் கொண்டும் எழுதப்பட்டது.

அந்தப் பழங்கால வாணிகத்துக்கும் இக்காலத்து விஞ்ஞான உலக வாணிகத்துக்கும் பெருத்த வேறுபாடுகள் உள்ளன. ஆனால், அந்தப் பழங்காலத்தவர், அக்காலத்து இடம், பொருள், ஏவல்களுக்கும் சூழ்நிலைகளுக்கும் தக்கபடித் தரை வாணிகத்தையும் கடல் வாணிகத்தையும் நடத்தினார் கள். அவர்கள் கூட்டாகச் சேர்ந்து 'சாத்து' அமைத்துப் பெரிய வாணிகத்தை நடத்தினார்கள். தரை வாணிகஞ் செய்த வாணிகத் தலைவர் மாசாத்துவர் என்று பெயர் பெற்றனர். கடல் வாணிகத் தலைவர் மாநாய்கர் (மாநாவிகர்) என்று பெயர் கூறப்பட்டனர். அக்காலத் தமிழகத்திலே பல மாசாத்துவர்களும் பல மாநாய்கர்களும் இருந்தார்கள்.