பக்கம்:பழங்காலத் தமிழர் வாணிகம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிங்கள அரசனை வென்று புத்த சகாப்தம் 306 முதல் 328வரையில் (கி.மு. 177 முதல் 155 வரையில்) இருபத்திரண்டு ஆண்டு நீதியாக அரசாண்டார்கள் என்று மகாவம்சமும் (XXI:10-11) தீபவம்சமும் (XVIII:47f ) கூறுகின்றன. இவ்விருவரும் அஸ்ஸநாவிகர் , (அஸ்ஸம் - அஸ்வம் = குதிரை ) குதிரை வாணிகர் என்று கூறப்பட்டுள்ளனர்.

நடுக்கடல் வாணிகம்

தமிழகத்துக்குக் கிழக்கே வெரு தூரத்தில் வங்காளக் குடாக் கடலுக்கு அப்பால் பசிபிக் மகா சமுத்திரத்தில் பெருந்திவுகளின் கூட்டம் இருக்கிறது. அந்தத் தீவுகளுக்கு இக்காலத்தில் கிழக்கிந்தியத் தீவுகள் என்றும் இந்தோனேஷியத் தீவுகள் என்றும் பெயர். சங்க காலத்திலே இந்தத் தீவுகளைத் தமிழர், சாவகம் என்றும் சாவக நாடு என்றும் கூறினார்கள். சாவக நாட்டோடு அக்காலத் தமிழர் கடல் வழியாக வாணிகஞ் செய்தனர். தமிழ் நாட்டிலிருந்து ஆயிரம் மைலுக்கப்பால் உள்ள சாவகத் தீவுகளுக்கு வங்காளக் குடாக் கடலைக் கடந்து நடுக்கடலிலே கப்பலோட்டிச் சென்ரர்கள்,

சாவக நாடு (கிழக்கிந்தியத் தீவுகள்) என்பது பெரிதும் சிறிதுமான ஆயிரக்கணக்கான தீவுகளின் கூட்டமாகும். இத்தீவுகளில் முக்கியமானது சாவா தீவு (ஜாவா). இதை வட நாட்டார் யுவதீயம் என்று கூறினார்கள். சீன நாட்டார் இதை யெ தீயவோ (Ye Tiao) என்று பெயர் கூறினார்கள். இது செழிப்பும் நிலவளமும் நீர்வளமும் உள்ளது. சாவா தீவுக்கு அடுத்துசுமாத்ரா, கலிமந்தன் (போர்னியோ), ஸுலவெலி (செலிபீஸ், மின்டனாயோ, ஹல்மஹீரா முதலான தீவுகளும் கணக்கற்ற சிறு சிறு தீவுகளும் சேர்ந்ததே தமிழர் கூறிய சாவக நாடு. சாவக நாட்டுக்கு அப்பால் வடக்கே சீன தேசம் இருந்தது. சீன தேசத்துக்கும் இந்தியாவுக்கும் இடை நடுவிலே கடலில் இருந்த சாவக நாடு (கிழக்கிந்தியத் தீவுகள்) அக்காலத்தில் உலகப் புகழ் பெற்ற வாணிக மத்திய இடமாக இருந்தது. அக்காலத்தில் உலகத்திலே வேறு எங்கும் கிடைக்காத, வாசனைச் சரக்குகள் அங்கே

37